உலகப் பொருளாதாரமே முடங்கும் அபாயம் - அமைதி வலயத்தை அழித்துவிடாதீர்கள்! ஹர்ஷ டி சில்வா கோரிக்கை!


இந்துச் சமுத்திரப் பிராந்தியத்தில் போர்ச் சூழல் உருவானால் அது இலங்கையை மட்டுமன்றி உலகப் பொருளாதாரத்தையும் கடுமையாக பாதிக்கக்கூடும் என ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஹர்ஷ டி சில்வா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்தியாவின் தலைநகர் புதுடில்லியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், இலங்கைக்கு அருகிலுள்ள சர்வதேச கடல் பகுதியில் ஈரானியக் கப்பல் தாக்குதலுக்குள்ளான சம்பவம் கவலைக்குரியது என கூறினார்.

இலங்கை எப்போதும் அமைதியை விரும்பும் நாடாக இருப்பதுடன், மத்திய கிழக்கில் நடைபெறும் மோதல்களில் எந்தத் தரப்புக்கும் ஆதரவளிக்காது என்றும் அவர் குறிப்பிட்டார். பிராந்திய ஸ்திரத்தன்மையும் அமைதியும் பேணப்பட வேண்டும் என்பதே இலங்கையின் நிலைப்பாடு எனவும் தெரிவித்தார்.

உலகின் மிகவும் பரபரப்பான கடல் வர்த்தகப் பாதைகளில் ஒன்றுக்கு மிக அருகில் இலங்கை அமைந்துள்ளது. ஆண்டுதோறும் சுமார் 60 ஆயிரம் கப்பல்கள் இலங்கையை கடந்து செல்லுகின்றன. உலகின் பெரும்பாலான எரிபொருள் விநியோகமும் இந்தப் பாதை வழியாக நடைபெறுகின்றது.

இதனால் இந்துப் பெருங்கடலில் மோதல்கள் நீடித்தால் கடல் வழிப் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, உலக வர்த்தகத்திலும் பெரிய சிக்கல்கள் ஏற்படக்கூடும் என்று அவர் எச்சரித்தார்.

மேலும், மத்திய கிழக்கில் பணிபுரியும் இலங்கையர்களிடமிருந்து கிடைக்கும் வெளிநாட்டு வருமானம் குறையக்கூடும் என்றும், பாதுகாப்பு பிரச்சினைகள் காரணமாக சுற்றுலாப் பயணிகளின் வருகையும் பாதிக்கப்படலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த போர்ச் சூழல் குறுகிய காலத்தில் முடிவுக்கு வந்தால் பெரிய பாதிப்புகள் இருக்காது. ஆனால் நீண்டகாலம் தொடர்ந்தால் இலங்கை கடுமையான பொருளாதார சவால்களை எதிர்கொள்ள நேரிடும் எனவும் ஹர்ஷ டி சில்வா எச்சரிக்கை விடுத்தார்.