யுத்தச்சூழல் காரணமாக வெளிநாட்டில் பணிபுரிபவர்கள் தொழில் இழக்கும் அபாயம் – வெளியான எச்சரிக்கை!


மேற்கு ஆசியாவில் நிலவும் யுத்தச் சூழ்நிலை காரணமாக இலங்கையர்களுக்கு தொழில் இழப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாக உரிமம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

எனினும், தற்போது தொழில் இழப்பு ஏற்படவில்லை என்றும், பணியாளர்கள் வெளிநாடு செல்லும் செயல்முறை தற்காலிகமாக தாமதமாகியுள்ளது மட்டுமே நடைபெறுவதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இலங்கையின் வருடாந்திர வெளிநாட்டு வேலைவாய்ப்பில் 80 முதல் 90 வீதம் வரை மேற்கு ஆசிய நாடுகளிலேயே உள்ளதாக உரிமம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் அமைப்பின் செயலாளர் எம்.வி.எம். அர்சாத் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் அதிகாரப்பூர்வமாக சுமார் 3 இலட்சம் பேர் மேற்கு ஆசியாவிற்கு வேலைக்காக செல்கின்றனர். அதில் சுமார் 2 இலட்சத்து 30 ஆயிரம் பேர் தொழிலை இழக்கும் அபாயம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், பாதுகாப்பு அச்சம் காரணமாக வெளிநாட்டு வேலைக்கு தெரிவுசெய்யப்பட்ட பலர் தாங்களாகவே பின்வாங்கி வருவதாகவும் தொழில் வழங்குநர்கள் முகவர்களிடம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலைமை கொரோனா காலத்தில் ஏற்பட்ட சூழ்நிலையைப் போன்றதாக இருக்கும் எனவும், சிலர் வேலை இழக்க நேரிடலாம், சிலர் தங்களின் விருப்பப்படி நாடு திரும்பலாம் எனவும் அவர் தெரிவித்தார். இவ்வாறு தாமாகவே நாடு திரும்புவோருக்கு இழப்பீடு கிடைக்கும் வாய்ப்பு குறைவாக இருக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், இந்த நிலை நீடித்தால் வெளிநாட்டு வருவாய் குறையும் அபாயம் இருப்பதாகவும் குறிப்பிடப்படுகிறது. கடந்த 2025ஆம் ஆண்டில் வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்கள் அனுப்பிய அந்நிய செலாவணி சுமார் 8 பில்லியன் அமெரிக்க டொலராக இருந்தது குறிப்பிடத்தக்கது.