ஈரான் அரசாங்கம் கோரிக்கை விடுத்தால் சடலங்களை ஒப்படைக்கத் தயார்: அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ!
அமெரிக்காவின் தாக்குதலால் விபத்துக்குள்ளான IRIS DENA கப்பலிலிருந்து மீட்கப்பட்ட சடலங்களை ஒப்படைக்குமாறு ஈரான் அரசாங்கம் கோரிக்கை விடுத்தால், அந்தச் சடலங்களை அவர்களிடம் ஒப்படைக்க இலங்கை அரசாங்கம் தயாராக இருப்பதாக அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
மேலும், விபத்துக்குள்ளான கப்பல் தற்போது வரையில் இலங்கை தரைப்பகுதியிலிருந்து 09 கடல் மைல் தொலைவில் இருப்பதாகவும், கப்பலின் எஞ்சினில் கோளாறு இருப்பதால் இலங்கை கடற்படையால் அந்தக் கப்பலை பொறுப்பேற்று திருகோணமலை துறைமுகத்துக்கு எடுத்துச் செல்வதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று (10) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டார்.
“மத்திய கிழக்கு போர் விடயத்தில் நாங்கள் நடுநிலையான அரசு. இந்த யுத்தத்தில் நாங்கள் பங்குபற்றவில்லை. நடுநிலையான அரசு என்ற அடிப்படையில் சமுத்திர சட்டதிட்டங்களின் அடிப்படையிலேயே செயற்பட்டு வருகிறோம். இந்தக் கப்பலிலிருந்து மீட்கப்பட்ட 84 சடலங்கள் இலங்கை அரசின் பொறுப்பிலேயே இருக்கின்றன. ஈரான் அரசாங்கம் கோரிக்கை விடுத்தால் அந்த சடலங்களை ஒப்படைக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.
அதேபோன்று, இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 32 பேர் கடற்படையின் பொறுப்பில் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இத்தகைய சூழ்நிலைகளில் நடுநிலை அரசாக எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது தொடர்பில் சர்வதேச சட்டங்கள் மற்றும் ஒழுங்குவிதிகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.
மேலும், இரண்டாவது கப்பலிலிருந்து இலங்கை அரசாங்கத்தினால் பொறுப்பேற்கப்பட்டு தற்போது கடற்படையின் பொறுப்பில் இருக்கும் 206 ஈரானியர்கள் தொடர்பிலும் தற்போது அமுலில் உள்ள சட்டங்கள் மற்றும் ஒழுங்குவிதிகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க அரசாங்கம் தயாராக உள்ளது.
இந்த சடலங்கள் எமது நாட்டில் இருக்கும் வரையும் சிகிச்சை பெற்று வருபவர்கள் எமது பொறுப்பில் இருக்கும் வரையும் அவர்களுக்கு தேவையான வசதிகள் மற்றும் செலவுகளை அரசாங்கம் மேற்கொள்ளும். இதுவே அரசாங்கத்தின் தீர்மானமாகும். நடுநிலை அரசு என்ற அடிப்படையிலேயே இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட கடல் சட்டங்களின் அடிப்படையில் இலங்கையின் கடல் எல்லை 12 கடல் மைல் வரை மட்டுமே உள்ளது. அதற்கு அப்பால் பிரத்தியேக பொருளாதார வலயம் அமைந்துள்ளது. அந்தப் பகுதிகளில் பொருளாதார உரிமைகள் மட்டுமே எமக்குள்ளது. கப்பல் போக்குவரத்து நடவடிக்கைகளில் எமது தலையீடு இருக்காது. அந்தப் பகுதியை அனைத்து நாடுகளும் பயன்படுத்த முடியும்.
ஆனால் இந்தத் தாக்குதல் இடம்பெற்ற கப்பல் எமது கடல் எல்லைக்குள் இல்லை. 12 கடல் மைலுக்கு அப்பாலே அந்தக் கப்பல் தாக்குதலுக்குள்ளாகியுள்ளது.
இந்தியாவில் இடம்பெற்ற கடற்படை பயிற்சி நடவடிக்கைகளில் உலகின் பல்வேறு நாடுகள் பங்கேற்றிருந்தன. பெப்ரவரி 26ஆம் திகதி குறித்த ஈரான் கப்பல்களும் இதில் பங்கேற்றிருந்தன. மார்ச் 09 முதல் 13ஆம் திகதி வரை நட்புறவு வருகைக்காக இலங்கைக்கு வர விருப்பம் தெரிவித்திருந்தனர். அதற்கு அப்பால் வேறு தகவல்கள் எமக்கு கிடைக்கவில்லை.
இரு நாடுகள் போரில் ஈடுபடும் போது மூன்றாம் தரப்பான நாடுகளுக்கு முன்கூட்டியே தகவல் வழங்கப்படும் என்று எதிர்பார்க்க முடியாது. எனவே இந்தத் தாக்குதல் தொடர்பில் அமெரிக்காவிடமிருந்து எதுவித தகவலும் கிடைக்கவில்லை.
ஆனால் கடற்படைக்கு அங்கிகள் மற்றும் சடலங்கள் கடலில் மிதப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே மீட்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
தற்போது விபத்துக்குள்ளான கப்பல் இலங்கை தரைப்பகுதியிலிருந்து 09 கடல் மைல் தொலைவில் உள்ளது. கப்பலின் எஞ்சினில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை சரிசெய்ய கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது. எஞ்சின் பிரச்சினை சரியாகியவுடன் கப்பலை கடற்படையினர் பொறுப்பேற்று திருகோணமலை துறைமுகத்துக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த விவகாரத்தில் இலங்கை எந்த ஒரு தரப்புக்கும் பக்கச்சார்பாக செயல்படாது. நடுநிலை அரசாக சர்வதேச சட்டங்கள் மற்றும் ஒழுங்குவிதிகளின் அடிப்படையில் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படும்” என அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
