45 ஈரான் மாலுமிகளின் உடலங்கள் தாய்நாட்டுக்கு அனுப்பிவைப்பு!
காலி கடற்பகுதியில் அமெரிக்காவின் டொர்பிடோ (Torpedo) தாக்குதலுக்கு உள்ளாகி மூழ்கிய ‘ஐரிஸ் டெனா’ (Iris Dena) கப்பலில் உயிரிழந்த 84 ஈரானிய மாலுமிகளில் 45 பேரின் உடல்கள் இன்று ஈரானுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
காலி போதனா மருத்துவமனையின் இரண்டு குளிரூட்டப்பட்ட அறைகளில் வைக்கப்பட்டிருந்த இந்த 45 உடல்களும் தற்போது மத்தல சர்வதேச வானூர்தி நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உயிரிழந்தவர்களின் உடலங்களை ஈரான் தூதரகத்திடம் ஒப்படைக்குமாறு காலி பிரதம நீதவான் சமீர தொடங்கொட வழங்கிய உத்தரவின் பேரிலேயே குறித்த உடல்கள் இன்று வானூர்தி மூலம் ஈரானுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.
கடந்த 4ஆம் திகதி, காலி துறைமுகத்திலிருந்து சுமார் 19 கடல் மைல் தொலைவில் அமைந்துள்ள சர்வதேச கடற்பகுதியில் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் மேற்கொண்ட டொர்பிடோ தாக்குதலில் ஈரானுக்குச் சொந்தமான ‘ஐரிஸ் டெனா’ கப்பல் கடலில் மூழ்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த ஏனைய மாலுமிகளின் உடல்களும் அடுத்தடுத்த கட்டங்களாக ஈரானுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
