படிப்படியாகக் குறையப்போகும் மின் கட்டணம் - வெளியான அறிவிப்பு!
மின் உற்பத்தி செலவைக் குறைத்து, மின் கட்டணங்களை படிப்படியாகக் குறைப்பதே மறுசீரமைப்பின் ஒரு நோக்கமாகும் என இலங்கை மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான செயலணியின் பிரதானி புபுது நிரோஷன் ஹெடிகல்ல தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்
மின்சார சபையின் 2,153 ஊழியர்கள் இதுவரை விருப்ப ஓய்வுத் திட்டத்திற்கு (VRS) விண்ணப்பித்துள்ளனர்.
சபை கலைக்கப்பட்டாலும் எவரும் வேலையிழக்க மாட்டார்கள், அவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த அனைத்து சலுகைகளும் வசதிகளும் தொடர்ந்து வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் நுகர்வோர் இனி மின்சார சபைக்குப் பதிலாக 'Electricity Distribution Lanka (Private) Limited' (எலக்ட்ரிசிட்டி டிஸ்ட்ரிபியூஷன் லங்கா (பிரைவேட்) லிமிடெட்டுக்கு) நிறுவனத்துடன் தொடர்பு கொள்ள வேண்டும்.
இருப்பினும், அவசர அழைப்பு இலக்கங்கள் மற்றும் கட்டணம் செலுத்தும் முறைகளில் எவ்வித மாற்றமும் இருக்காது.
ஆறு புதிய நிறுவனங்களை உருவாக்குவதன் மூலம் வினைத்திறன் மற்றும் வெளிப்படைத்தன்மையை அதிகரித்து, மின் உற்பத்திச் செலவைக் குறைப்பதே இதன் பிரதான இலக்காகும்.
மேலும் மின் உற்பத்தி செலவைக் குறைத்து, மின் கட்டணங்களை படிப்படியாகக் குறைப்பதே இந்த மறுசீரமைப்பின் ஒரு நோக்கமாகும்.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் சில மின் நிலையங்களுடன் அதிக விலைக்கு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளதால், கட்டணக் குறைப்பு நடவடிக்கைகளை படிப்படியாகவே முன்னெடுக்க முடியும் என அவர் சுட்டிக்காட்டினார்.
மின்சார சபை தனியார் மயப்படுத்தப்படவில்லை. திறைச்சேரிக்கு சொந்தமான அரச நிறுவனங்களிடமே பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் போது மின்சாரசபையின் சேவையாளர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. மின்சாரத்துறையை வினைத்திறனாக்குவதற்காக கட்டமைப்பில் மாத்திரமே மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது என வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி நேற்று தெரிவித்தார்.
