எனக்கு எண்ணெய் கிணறுகள் இல்லை; ஜனாதிபதி அநுர நகைச்சுவை!


தான் ஒரு எண்ணெய் கிணற்றின் உரிமையாளரோ அல்லது ஒரு எண்ணெய் நிறுவனத்தின் பிரதிநிதியோ அல்ல என்றும், எரிபொருள் விலையை அதிகரிப்பதன் மூலம் தனிப்பட்ட லாபம் அடையும் எந்த நோக்கமும் தமக்கில்லை என்றும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

தற்போதைய உலகளாவிய சூழ்நிலைகளுக்கு மத்தியில் நாட்டின் எரிசக்தி விநியோகத்தை தடையின்றி முன்னெடுத்து செல்ல வேண்டிய பொறுப்பை நிறைவேற்றுவதற்காகவே எரிபொருள் விலையை அதிகரிக்க வேண்டியிருந்ததாக அவர் விளக்கமளித்தார்.

இதனைத் தவிர, அரசாங்கமோ அல்லது தனிப்பட்ட முறையிலோ லாபம் ஈட்டும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்படவில்லை என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்திருப்பதுடன், நிலவும் நிச்சயமற்ற சூழ்நிலைகளும் இந்த தீர்மானத்தை எடுக்க காரணமாக இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஒரு அரசாங்கமாக நாட்டில் எரிசக்தி விநியோகம் தடையின்றி நடைபெறுவதற்கான பொறுப்பு தமக்குள்ளது என்றும், அதனை நிறைவேற்றுவதற்காகவே இத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

மேலும், அடுத்த இரண்டு மாத காலப்பகுதிக்குள் நாட்டில் எரிசக்தி விநியோகத்தை தடையின்றி மேற்கொள்ள அரசாங்கம் அதிகபட்ச அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

மார்ச் மாத தொடக்கத்தில் ஒரு பேரல் கச்சா எண்ணெயின் விலை 70 அமெரிக்க டொலராக இருந்த நிலையில், தற்போது அது 100 அமெரிக்க டொலர் வரை உயர்ந்துள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர்ச் சூழ்நிலை காரணமாக பொருட்கள் மற்றும் சேவைகளின் விநியோகப் பாதைகளில் தடைகள் ஏற்பட்டுள்ளதுடன், காப்புறுதி கட்டணங்கள் அதிகரித்திருப்பதும், சில டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டிருப்பதும் போன்ற காரணங்களால் உலக எண்ணெய் சந்தை கடுமையான நிச்சயமற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக அவர் விளக்கினார்.

அதேவேளை, 2022ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை விட தற்போதைய நிலைமை மாறுபட்டதாக இருப்பதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். தற்போது இலங்கையிடம் 7.2 பில்லியன் அமெரிக்க டொலர் அளவிலான அந்நியச் செலாவணி கையிருப்பு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

எனவே, எண்ணெய் கொள்வனவு செய்ய டொலர் இல்லாமை என்ற பிரச்சினை தற்போது இல்லை என்றும், எதிர்காலத்தில் ஏதேனும் நெருக்கடி ஏற்பட்டால் அது விநியோகப் பாதைகளில் ஏற்படும் தடைகள் காரணமாகவே உருவாகக்கூடும் என்றும் ஜனாதிபதி விளக்கமளித்தார்.

அதேநேரத்தில், எரிபொருள் விலையில் சிறிய மாற்றங்கள் ஏற்பட்டாலும் கூட மக்கள் தேவையற்ற அச்சத்துடன் அதிகளவில் எரிபொருளை சேமித்து வைக்க முயற்சிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதற்கான எடுத்துக்காட்டாக, மார்ச் 1ஆம் திகதி 4,500 கிலோலீட்டராக இருந்த டீசல் விற்பனை, மார்ச் 3ஆம் திகதி வரையில் 10,500 கிலோலீட்டராக அதிகரித்திருந்ததை ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

இத்தகைய சூழ்நிலைகளைச் சமாளிக்க வேண்டுமெனில், மக்கள் தங்களது நுகர்வு முறைகளில் சில மாற்றங்களை செய்து நிதானத்துடனும் பொறுப்புடனும் செயற்பட வேண்டியது அவசியம் என்றும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வலியுறுத்தினார்.