பொருளாதார நெருக்கடியை வென்றெடுக்க கூட்டு முயற்சி - ஜனாதிபதி பகிரங்க அழைப்பு!


மத்திய கிழக்கு பகுதியில் நிலவி வரும் போர்ச் சூழ்நிலையால் உருவாகியுள்ள பொருளாதாரச் சவால்களை, தனித்தனியாக அல்லாமல் கூட்டு முயற்சியுடன் செயல்படுவதன் மூலம் சமாளிக்க முடியும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற இலங்கை இளம் தொழில்முனைவோர் சபையின் 2026 ஆம் ஆண்டிற்கான வருடாந்த பொதுக்கூட்டத்தில் முதன்மை விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றியபோது அவர் இந்த கருத்தை வெளியிட்டார்.

அப்போது அவர் மேலும் தெரிவித்ததாவது, தற்போதைய பொருளாதார சவால்கள் 2022 ஆம் ஆண்டு ஏற்பட்ட டொலர் தட்டுப்பாடு போன்ற உள்நாட்டு பிரச்சினை அல்ல என்றும், உலகளாவிய விநியோகப் பாதைகள் பாதிக்கப்பட்டதால் ஏற்பட்டுள்ள வெளிப்புற அதிர்ச்சி எனவும் சுட்டிக்காட்டினார்.

மேலும், மார்ச் மாத தொடக்கத்தில் ஒரு பீப்பாய் மசகு எண்ணெயின் விலை 70 அமெரிக்க டொலராக இருந்த நிலையில், தற்போது அது 100 அமெரிக்க டொலர் வரை உயர்ந்துள்ளதாகவும், இதன் மூலம் சுமார் 42 சதவீதம் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இந்த நிலைமை காரணமாக உலகச் சந்தையில் நிச்சயமற்ற சூழல் உருவாகியுள்ளது என்றும் அவர் கூறினார்.

இதனுடன், எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சம் காரணமாக பொதுமக்கள் அதிகளவில் எரிபொருளை சேமிக்கத் தொடங்கியுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

அவர் இதுகுறித்து மேலும் கூறுகையில்,
“மார்ச் 1 ஆம் திகதி 4,500 கிலோ லீற்றராக இருந்த டீசல் விற்பனை, மார்ச் 3 ஆம் திகதி 10,500 கிலோ லீற்றராக அதிகரித்துள்ளது. இருப்பினும் பொதுமக்கள் பீதி அடைய தேவையில்லை. அடுத்த இரண்டு மாதங்களுக்கு தடையற்ற எரிபொருள் விநியோகத்தை உறுதிப்படுத்துவதற்காக அரசு நட்பு நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது” என தெரிவித்தார்.

மேலும், நவீன தொழில்நுட்பங்களின் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றுவதே அரசின் முக்கிய இலக்கு என்றும் அவர் கூறினார். அதற்காக நாட்டில் டிஜிட்டல் மயமாக்கலை விரிவுபடுத்தும் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) மற்றும் தரவு மையங்களை மையமாகக் கொண்ட பொருளாதார அமைப்பை உருவாக்கும் நோக்கில், இந்த ஆண்டுக்கான வரவு–செலவுத் திட்டத்தில் 6.5 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

மேலும், இந்த ஆண்டின் இறுதிக்குள் நாட்டில் டிஜிட்டல் அடையாள அட்டை (Digital ID) கட்டாயமாக அறிமுகப்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அதேவேளை,
“நாங்கள் ஆட்சிப் பொறுப்பேற்றபோது இருந்த பொருளாதார சந்தேகங்களும் அச்சங்களும் இன்று குறைந்துள்ளன. 2025 ஆம் ஆண்டில் இலங்கை வரலாற்றில் மிகவும் குறைந்த வரவு–செலவுத் திட்ட பற்றாக்குறை பதிவு செய்யப்பட்டுள்ளது. இனி வெளிப்புற மற்றும் உள்நாட்டு அதிர்வுகளையும் சமாளிக்கக்கூடிய வலுவான பொருளாதார அமைப்பை உருவாக்குவதே எங்கள் இலக்கு” என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் இளம் தொழில்முனைவோரின் பங்கு மிகவும் முக்கியமானது என்றும் அவர் பாராட்டினார். அடுத்த சில ஆண்டுகளில் அவர்கள் தங்களது வர்த்தகத்தை இரட்டிப்பாக்கும் வகையில் முன்னேற வேண்டும் என்றும், அதற்குத் தேவையான அனைத்து வசதிகளையும் வழங்க அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி உறுதியளித்தார்.