இலங்கையில் வீட்டில் இருந்தே வேலை செய்யும் முறை அமுலாகுமா? வெளியான அறிவிப்பு!


சர்வதேச ரீதியில் நிலவும் பொருளாதார மற்றும் எரிசக்தி நெருக்கடிகளை முன்னிட்டு பல நாடுகள் ‘வீட்டிலிருந்து வேலை செய்யும்’ (WFH) முறையை பின்பற்றி வரும் நிலையில், இலங்கையில் தற்போது அத்தகைய முறையை அமல்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என வர்த்தக, வணிக மற்றும் கூட்டுறவு அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் இவ்வாறான நடவடிக்கை தேவையாகும் பட்சத்தில், அது குறித்து உரிய கவனம் செலுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எரிசக்தியைச் சேமித்து, மக்கள் இயல்பாக வாழ்ந்து முன்னேறக்கூடிய சூழலை உருவாக்க அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்தார். இதற்காக முன்னெடுக்கப்படவுள்ள கட்டமைப்பு மாற்றங்கள் குறித்தும் அவர் விளக்கமளித்தார்.

அதன்படி, நாட்டின் பல பகுதிகளில் புதிய எரிவாயு கிடங்குகள் மற்றும் எண்ணெய் தொட்டிகளை நிர்மாணிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

மேலும், திருகோணமலையில் அமைந்துள்ள பத்து எண்ணெய் தொட்டிகளை நவீனமயமாக்கும் பணிகளும் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

உலகச் சந்தையில் நிலவும் தளர்வற்ற மற்றும் மாற்றமடைந்துவரும் சூழ்நிலை காரணமாக, இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலையேற்றத்தை நுகர்வோர் எதிர்கொள்ள வேண்டிய நிலை உருவாகலாம் என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

குறிப்பாக, அமெரிக்க ஜனாதிபதி உள்ளிட்ட பல நாடுகளின் தலைவர்கள் எடுக்கும் அரசியல் தீர்மானங்களுக்கு ஏற்ப உலகச் சந்தையில் எரிபொருள் விலையில் மாற்றங்கள் ஏற்படுகின்றன என்றும் அவர் கூறினார்.

உலகளாவிய விலை உயர்வின் தாக்கம் இலங்கையிலும் எதிரொலிக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

நிர்வாக ரீதியிலான மாற்றங்களை விட, உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதன் மூலமே தற்போதைய நெருக்கடிக்கு தீர்வு காண அரசாங்கம் முயற்சி செய்து வருவதாகவும் அமைச்சரின் இந்த உரை எடுத்துக்காட்டுகிறது.