இலங்கையில் 40 பாகை செல்சியஸை விட அதிகரிக்கும் வெப்பநிலை; வெப்பச் சலன மழை குறித்து எச்சரிக்கை!


இலங்கையில் 2026 ஏப்ரல் 2 முதல் 15 வரை கடும் வெப்பநிலை நிலவும் என்பதால் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டியது அவசியம் என யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியல் துறையின் பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்த காலப்பகுதியில் சூரியன் இலங்கைக்கு மேலாக உச்சமாக நிலைபெறவுள்ளது. ஆண்டு தோறும் ஏப்ரல் மாதத்தின் ஆரம்பத்தில் சூரியன் இலங்கையின் பல பகுதிகளுக்கு கிட்டத்தட்ட 90 பாகை கோணத்தில் அமைவதால் நாடு முழுவதும் அதிக வெப்பநிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதன்படி,

  • ஏப்ரல் 4 – பருத்தித்துறை
  • ஏப்ரல் 5 – எல்பிட்டிய
  • ஏப்ரல் 6 – களுத்துறை
  • ஏப்ரல் 7 – கொழும்பு மற்றும் களனியா
  • ஏப்ரல் 8 – மகியங்கனை

போன்ற பகுதிகளுக்கு சூரியன் நேராக உச்சம் கொடுக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த காலத்தில் நாட்டின் பல பகுதிகளில் சராசரி வெப்பநிலை 38°C முதல் 42°C வரை இருக்கும். மேலும் பகல் நேர அதிகபட்ச வெப்பநிலை 43°C-ஐ விட அதிகமாக பதிவாகும் வாய்ப்பு உள்ளது. உணரப்படும் வெப்பநிலை (Heat Index) 48°C-ஐ கடந்தும் இருக்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக மனித உடல் 40°C-ஐ விட அதிகமான வெப்பநிலையை தாங்க முடியாது என்பதால், இந்த நிலைமைகள் வெப்ப வாதம் (Heat Stroke) போன்ற ஆபத்தான உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக,

  • முதியவர்கள்
  • சிறுவர்கள்
  • விசேட தேவையுடையவர்கள்
  • அதிக நீரிழப்பு உள்ளவர்கள்

இவர்களுக்கு இந்த அதிக வெப்பநிலை அதிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என கூறப்பட்டுள்ளது.

இதனால், காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை திறந்த வெளிகளில் நடைபெறும் அனைத்து செயற்பாடுகளையும், குறிப்பாக விளையாட்டுப் போட்டிகளை நிறுத்துவது சிறந்தது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், இந்த நேரங்களில் தேவையற்ற வெளிச்செலவுகளை தவிர்க்கவும், சிறுவர்கள் மற்றும் குழந்தைகளை வெளியில் கொண்டு செல்வதைத் தவிர்க்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இந்த காலப்பகுதியில் வளிமண்டலத்தில் அதிக ஈரப்பதம் நிலவும் என்பதால், வெப்பத்துடன் இணைந்து இது மேலும் உடல்நல ஆபத்துகளை உருவாக்கக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், ஏப்ரல் 2 முதல் 15 வரை அதிக வெப்பநிலை காரணமாக அதிக ஆவியாக்கம் மற்றும் ஆவியுயிர்ப்பு (Evaporation & Transpiration) ஏற்படும் வாய்ப்பு உள்ளது. குறிப்பாக வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களில் இது அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பயிர்கள் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதால், விவசாயிகள் தேவையான நீர்ப்பாசன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, அதிக வெப்பநிலை காரணமாக வெப்பச் சலன நிகழ்வு (Convectional activity) அதிகரிக்கும். இதன் விளைவாக 2026 ஏப்ரல் 3 முதல் 10 வரை, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட நாட்டின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மழை இடி மின்னலுடன் தொடர்புடையதாக இருக்கும் என்பதால், இடியினால் ஏற்படும் அபாயங்களை கருத்தில் கொண்டு மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

எனவே, குறித்த காலப்பகுதியில் மக்கள் வெப்பத்திலிருந்து தங்களை பாதுகாத்துக்கொண்டு, தேவையற்ற வெளிச்செயல்களை தவிர்த்து, உடல்நல பாதுகாப்பு வழிமுறைகளை கடைப்பிடிப்பது மிக அவசியம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.