ஆசிரியர் வெற்றிடங்களுக்கு அமைய ஆட்சேர்ப்பு நடவடிக்கை! பிரதமர் ஹரிணியின் அதிரடி திட்டங்கள்!


பெருந்தோட்டப் பாடசாலைகளின் அபிவிருத்திப் பணிகளை மாவட்ட அபிவிருத்திக் குழுக்களுடன் ஒருங்கிணைந்து முன்னெடுக்குமாறும், நிலவும் வெற்றிடங்களை அடிப்படையாகக் கொண்டு எதிர்காலத்தில் ஆசிரியர் சேவைக்கான மேலதிக ஆட்சேர்ப்புகள் மேற்கொள்ளப்படும் என்றும் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

பெருந்தோட்டப் பாடசாலைகள் எதிர்நோக்கும் சவால்களுக்கு தீர்வுகளை வகுப்பதற்காக, அவரின் தலைமையில் நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின்போது இக்கருத்துகள் வெளியிடப்பட்டன. இதில் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் அதிகாரிகளும், பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சின் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

முதற்கட்டமாக 23,000 ஆசிரியர்களை சேவையில் இணைப்பதன் மூலம் தற்போதைய ஆசிரியர் பற்றாக்குறையை ஓரளவு சமாளிக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், பாடசாலைகளின் காணி உரிமைகளை உறுதிப்படுத்துதல், போதிய சுகாதார வசதிகளை ஏற்படுத்துதல் மற்றும் மாணவர்களுக்கான போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துதல் குறித்து அதிகாரிகளுக்கு பிரதமர் பணிப்புரை வழங்கினார்.

தரம் 13 மாணவர்கள் விஞ்ஞானம் மற்றும் கணிதப் பிரிவுகளில் எதிர்நோக்கும் சிக்கல்கள், தொழிற்கல்வி பயிலும் போது உருவாகும் மொழி தொடர்பான பிரச்சினைகள் ஆகியவற்றுக்கும் விசேட கவனம் செலுத்தப்பட்டது.

பெருந்தோட்டப் பாடசாலைகள் அனைத்தும் அரச பாடசாலைகளே என்பதை வலியுறுத்திய பிரதமர், அவற்றின் பெயரிடல் மாற்றம் மற்றும் மாவட்டக் குழுக்களின் நேரடி கண்காணிப்பு தொடர்பாகவும் ஆலோசனை நடத்தினார்.