மாமனார் நடத்திய கத்திக்குத்துத் தாக்குதலில் மருமகன் பலி!


கேகாலை மாவட்டம், தெரணியகலை – மாலிபொடவத்த தேயிலைத் தொழிற்சாலைப் பிரிவில், மாமனார் நடத்திய கத்திக்குத்துத் தாக்குதலில் மருமகன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று (20) மாலை மாமனாருக்கும் மருமகனுக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதையடுத்து, மாமனார் கூரிய ஆயுதத்தால் மருமகனை தாக்கியதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பலத்த காயங்களுடன் மருமகன் பிரதேசவாசிகளால் தெரணியகலை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

உயிரிழந்தவர் 33 வயதுடையவர் எனவும், ஒரு பிள்ளையின் தந்தை எனவும் கூறப்படுகிறது. 

மேலும், அவரது மனைவி தொழில் நிமித்தமாக தற்போது வெளிநாட்டில் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவத்தைத் தொடர்ந்து சந்தேகநபரான மாமனார் பிரதேசத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளதுடன், அவரைக் கைது செய்ய தெரணியகலை பொலிஸார் விசேட விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.