பஸ் தரிப்பிடத்தில் நின்ற வயோதிபப் பெண்; ஜூஸ் கொடுத்து நகைகளை கொள்ளையிட்ட யுவதி!


மட்டக்களப்பு பிரதான பஸ் தரிப்பு நிலையத்தில் பஸ் வண்டிக்காக காத்திருந்த வயோதிபப் பெண் ஒருவரிடம், யுவதி ஒருவர் மயக்க மருந்து கலந்து கொடுத்த குளிர் பானத்தை குடிக்கச் செய்து, அவரிடம் இருந்த 7 ½ பவுண் தங்க நகைகளை கொள்ளையடித்து தப்பிச் சென்ற சம்பவம்   இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவத்தில் மயக்கமடைந்த நிலையில் இருந்த வயோதிபப் பெண் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

பெரிய கல்லாறு பகுதியில் வசிக்கும் குறித்த 64 வயதுடைய வயோதிபப் பெண், தனது சகோதரியின் மகளின் வீட்டிற்கு செல்வதற்காக நேற்று (04) பகல் 11.00 மணியளவில்  பஸ்ஸில் ஏறி, பிற்பகல் 2.00 மணியளவில் மட்டக்களப்பு நகரின் பிரதான பஸ் தரிப்பிடத்தை வந்தடைந்துள்ளார்.

புதூர் நோக்கிச் செல்ல வேண்டிய பஸ் வண்டி ஏற்கனவே சென்றுவிட்ட நிலையில், அடுத்த பஸ் வண்டிக்காக அவர் தரிப்பிடத்தில் காத்திருந்துள்ளார்.

அந்த நேரத்தில், மோட்டார் சைக்கிளில் இளைஞர் ஒருவருடன் வந்த இளம் யுவதி ஒருவர், குறித்த வயோதிபப் பெண்ணிடம் நட்புடன் பேச்சு கொடுத்து, “இங்கு கள்ளர்கள் அதிகம், உங்கள் தங்க சங்கிலியை அறுத்துச் சென்று விடுவார்கள்” என கூறி, தங்க ஆபரணங்களை கழற்றி கைப்பையில் வைக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, மயக்க மருந்து கலந்த குளிர் பானத்தை, குடிக்குமாறு பல தடவைகள் வற்புறுத்தியுள்ளார். அதன் பேரில் வயோதிபப் பெண் அந்த குளிர் பானத்தைப் பருகிய பின்னர் மயக்கமடைந்துள்ளார்.

வயோதிபப் பெண் மயக்கமடைந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, அவரது கைப்பையில் இருந்த 35 இலட்சம் ரூபா பெறுமதியான 05 பவுண் தங்க சங்கிலி மற்றும் இரண்டு காப்புகள் உள்ளிட்ட மொத்தம் 7½ பவுண் தங்க ஆபரணங்களை கொள்ளையடித்து, மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞருடன் அந்த யுவதி தப்பிச் சென்றுள்ளார்.

மாலை 5.30 மணியளவில் பஸ் வண்டிக்காக தரிப்பிடத்திற்கு வந்த மற்றொரு பெண், மயக்கமடைந்த நிலையில் கிடந்த வயோதிபப் பெண்ணைக் கண்டுள்ளார்.

இதனைத்தொடர்ந்து அவரது உறவினர்களுக்கு தகவல் வழங்கப்பட்டு, உடனடியாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.