வெனிசுலா மீது தாக்குதல் நடத்தி, அதன் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை கைது செய்த அமெரிக்கா: ஈரான், ரஷ்யா கண்டனம்!


வெனிசுலா மீது அமெரிக்கா பெரிய அளவிலான இராணுவத் தாக்குதலை மேற்கொண்டு, அந்நாட்டு ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவையும் அவரது மனைவியையும் கைது செய்து நாட்டிலிருந்து வெளியேற்றியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

1989ஆம் ஆண்டு பனாமாவின் இராணுவத் தலைவர் மானுவல் நோரியேகாவை பதவியிலிருந்து அகற்ற அமெரிக்கா படையெடுத்ததற்குப் பிறகு, லத்தீன் அமெரிக்காவில் இவ்வளவு நேரடியான இராணுவத் தலையீட்டை அமெரிக்கா மேற்கொண்டது இதுவே முதல் முறை என சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

இந்த நிலையில், ஜனாதிபதி ட்ரம்ப் தனது Truth Social சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதிவில், வெனிசுலா மற்றும் அதன் தலைவர் நிக்கோலஸ் மதுரோ மீது “மிகப் பெரிய மற்றும் வெற்றிகரமான தாக்குதல்” நடத்தப்பட்டதாக தெரிவித்துள்ளார். மேலும், மதுரோவும் அவரது மனைவியும் கைது செய்யப்பட்டு நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஆனால், மதுரோ மற்றும் அவரது மனைவி அமெரிக்காவால் கைது செய்யப்பட்டுள்ளதை வெனிசுலா அரசாங்கம் இதுவரை உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.

ஜனாதிபதி மதுரோ போதைப்பொருள் கடத்தல் தொடர்புடைய ஆட்சியை நடத்துவதாகவும், தேர்தல்களில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாகவும் அமெரிக்கா நீண்ட காலமாக குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறது. 2013ஆம் ஆண்டு ஹியூகோ சாவேஸின் மறைவுக்குப் பிறகு அதிகாரத்திற்கு வந்த மதுரோ, உலகின் மிகப்பெரிய எண்ணெய் வளங்களை கொண்டுள்ள வெனிசுலா மீது கட்டுப்பாடு செலுத்த அமெரிக்கா முயற்சிப்பதாக தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தார்.

இந்நிலையில், மதுரோ மற்றும் அவரது மனைவியை கைது செய்து நாடுகடத்தியுள்ளதாக கூறப்படும் அமெரிக்காவின் நடவடிக்கைக்கு ரஷ்யா மற்றும் ஈரான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

மதுரோவை சிறைப்பிடித்ததாக கூறப்படும் அமெரிக்காவின் ஆயுதமேந்திய ஆக்கிரமிப்பை ரஷ்யா கடுமையாக கண்டித்துள்ளது. இந்த நடவடிக்கை மீண்டும் இடதுசாரி – வலதுசாரி அரசியல் மோதல்களுக்கு வித்திட்டுள்ளதாக தெரிவித்த ரஷ்யா, அமைதியை கடைப்பிடிக்குமாறு அமெரிக்காவை வலியுறுத்தியுள்ளது. மேலும், இந்த தாக்குதலுக்கான எந்தவொரு நியாயப்படுத்துதலையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், இங்கு கொள்கைரீதியான விரோதமே மேலோங்கியுள்ளதாகவும் ரஷ்யா தெரிவித்துள்ளது.

அதேபோல், அமெரிக்காவின் நடவடிக்கைக்கு ஈரான் வெளியுறவு அமைச்சகமும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து ஈரான் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“வெனிசுலா மீது அமெரிக்கா மேற்கொண்ட இராணுவத் தாக்குதல், அந்த நாட்டின் தேசிய இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டை அப்பட்டமாக மீறுவதாகும். இதனை ஈரான் வன்மையாக கண்டிக்கிறது.

இது ஐக்கிய நாடுகள் அவை சாசனத்தின் கடுமையான மீறலாகும். ஐ.நா. உறுப்பினரான ஒரு சுதந்திர நாட்டுக்கு எதிரான அமெரிக்க இராணுவ ஆக்கிரமிப்பு, சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாகும். இதன் விளைவுகள் முழு சர்வதேச அமைப்பினையும் பாதிக்கும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.