2026 முதலாம் தர மாணவர் சேர்க்கை இன்று ஆரம்பம்

புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் முதலாம் தரத்திற்குரிய பாடத்திட்டத்தை இந்த ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தத் திட்டமிட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அதனடிப்படையில், 2026 ஆம் ஆண்டுக்கான முதலாம் தரத்திற்கு மாணவர்களைப் பாடசாலைகளில் சேர்த்துக்கொள்ளும் நடவடிக்கை இன்று (29) ஆரம்பமாகியுள்ளது.

இந்த ஆண்டிற்கான முதலாம் தர மாணவர் சேர்க்கையின் தேசிய நிகழ்வு, அத்துருகிரிய குணசேகர வித்தியாலயத்தில் இன்று காலை நடைபெற்றதுடன், குறித்த நிகழ்வு கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

முதலாம் தரத்தில் இணையும் பிள்ளைகளுக்கு வாழ்த்துச் செய்தி விடுத்த பிரதமர், எந்தவொரு பிள்ளையின் கல்வியும் பெற்றோரின் பொருளாதார நிலையை அடிப்படையாகக் கொண்டு தீர்மானிக்கப்படக் கூடாது என வலியுறுத்தினார். கல்வி உரிமை அனைத்துப் பிள்ளைகளுக்கும் சமமாகக் கிடைக்க வேண்டுமெனவும், கல்வியிலிருந்து எந்தவொரு பிள்ளையும் புறக்கணிக்கப்படக்கூடாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, ஆறாம் தரத்திற்கான புதிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவது அடுத்த ஆண்டிற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ள போதிலும், அதன் மூலம் எந்தவொரு மாணவருக்கும் அநீதி ஏற்பட இடமளிக்கப்படமாட்டாது எனவும் பிரதமர் ஹரிணி அமரசூரிய உறுதியளித்துள்ளார்.