வீதியோரத்தில் உறங்கிய நபர் மீது ஏறிய வாகனம்!


மட்டக்களப்பு - கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள தும்பாஞ்சோலை பகுதியில் வீதியில் நித்திரை செய்த ஒருவர் மீது வாகனம் ஏறியதில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று (17.06.2025) அதிகாலை வேளையில் இடம்பெற்றுள்ளது.

இளைஞன் மீது வாகனத்தை ஏற்றிய நபர் தப்பி ஓடியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் மண்டூர் சின்னவத்தையைச் சேர்ந்த 25 வயதுடைய செல்வம் சாந்தன் செல்லையா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தும்பாஞ்சோலை பகுதியிலுள்ள வீதிக்கு அருகிலுள்ள வேளாண்மை காவலுக்காக குறித்த இளைஞன் உட்பட இருவர் வீதி ஓரத்தில் நித்திரை செய்துள்ள போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அவர் படுகாயமடைந்த நிலையில் வீதியில் கிடப்பதை கண்டு அவரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்துள்ளார்.

அதேவேளை இளைஞனுடன் நித்திரை செய்தவர் தெய்வாதீனமாக தப்பியுள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கரடியனாறு போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.