வைத்திய ஆலோசனையின்றி மருந்து உட்கொண்ட கர்ப்பிணிப் பெண் பலி..!


அவிசாவளை பகுதியில் உள்ள தனியார் மருந்தகம் ஒன்றிலிருந்து பெறப்பட்ட மருந்தை அங்கீகரிக்கப்பட்ட வைத்தியரின் பரிந்துரையின்றி உட்கொண்டதன் காரணமாக 3 மாத கர்ப்பிணியான பெண் ஹோமாகம அரசு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

ருவான்வெல்ல பகுதியை சேர்ந்த 42 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தாய் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக ருவான்வெல்ல பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 05ஆம் திகதி, இந்தப் பெண் தனது கணவருடன் அவிசாவளை பகுதியில் உள்ள தனியார் மருந்தகம் ஒன்றுக்கு சென்று, கர்ப்பத்தை கலைப்பதற்காக மருந்து கோரியுள்ளார். 

பின்னர், அந்த மருந்தகத்தில் இருந்து உடலில் செலுத்துவதற்காக மருத்துவ கருவி ஒன்றும் மற்றும் குடிப்பதற்காக மூன்று மாத்திரைகளும் வழங்கப்பட்டுள்ளன.

அந்த மாத்திரைகளை உட்கொண்ட பின்னர், குறித்த பெண்ணுக்கு ஒவ்வாமை ஏற்பட்டதால், தனியார் வைத்திய நிலையம் ஒன்றுக்கு சென்ற போது, அவருக்கு அங்கு சிகிச்சை வழங்க மறுத்து, அவரை உடனடியாக அரச வைத்தியசாலையில் அனுமதியாகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதற்கமைய, சிகிச்சைக்காக அவிசாவளை அரச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர், பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கடந்த 06ஆம் திகதி ஹோமாகம அரச வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். 

அங்கு, தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அவர், துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்தார்.

இந்த பெண் உட்கொண்ட மருந்து, வைத்தியரின் பரிந்துரையின்றி உட்கொள்ள அனுமதியில்லாத விஷத்தன்மை வாய்ந்த மருந்து எனவும், அத்தகைய மருந்தை பெறுவதும் வழங்குவதும் இரு தரப்பினராலும் செய்யப்பட்ட தவறு எனவும் இதன்போது தெரியவந்துள்ளது.

இதன்போது, வெளியிடப்பட்ட ஆதாரங்கள் மற்றும் பிரேத பரிசோதனை வைத்திய அறிக்கையின் அடிப்படையில், 

இறந்த பெண்ணின் உடல் பாகங்களையும், மூன்று மாத கருவின் உடல் பாகங்களையும் அரச இரசாயன பகுப்பாய்வாளருக்கு அனுப்பி, இறப்புக்கான காரணத்தை குறிப்பிடாமல், திறந்த தீர்ப்பை வழங்க, பிரேத பரிசோதனையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.