அர்ச்சுனா எம்.பியின் கருத்துக்கு உலமா சபை கண்டனம்!


யாழ்ப்பாணம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் ராமநாதன் அர்ச்சுனா, மார்ச் 08 ஆம் திகதி, தனது பாராளுமன்ற உரையின் போது முஸ்லிம் தனியார் சட்டம் மற்றும் இஸ்லாமிய விழுமியங்கள் குறித்து அறிவீனமாக கருத்து வெளியிட்டதை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை கடுமையாக கண்டித்துள்ளது.

இந்த விடயத்தினைப் பற்றிய விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள உலமா சபை, மார்க்க விவகாரங்கள் மற்றும் அதன் சட்டதிட்டங்களை பற்றிய போதிய அறிவின்றி கருத்து வெளியிடுவது, சமூகங்களுக்குள் தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்துவதோடு, குறிப்பிட்ட மதத்தை பின்பற்றும் மக்களின் உணர்வுகளை பாதிக்கும் நிலையை உருவாக்கக் கூடும் என தெரிவித்துள்ளது.

முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டங்களில், மார்க்க அடிப்படைகளுக்கு முரணில்லாத முறையில் மாற்றங்களை மேற்கொள்வதற்காக, தமது அமைப்பு சம்பந்தப்பட்ட அமைச்சுகள் மற்றும் அதிகாரிகளுடன் தொடர்ச்சியாக ஒத்துழைத்துக் கொண்டிருப்பதாகவும் அறிவித்துள்ளது.

மதம் சார்ந்த முக்கிய விடயங்களை பொது மன்றங்களில் பேசும் போது, மிகுந்த நாகரிகத்தோடு, தெளிவாகவும், பிறர் உணர்வுகளை மதித்தும் அணுகுவது அவசியம். பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட, மதம் சார்ந்த முக்கியமான விடயங்களை விவாதிக்க முனைவோர், உரிய மத அதிகாரிகளிடம் முன்பாக விளக்கம் பெற்ற பின்னரே கருத்து வெளியிட வேண்டும் எனவும், இஸ்லாத்தைப் பற்றிய தெளிவுகள் தேவைப்படுமாயின், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையுடன் தொடர்பு கொண்டு முறையாக விளக்கம் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் எனவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.