ஆசிரியையை தாக்கிய மற்றுமொரு ஆசிரியர்! - நாடாளுமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்ட பிரச்சினை
எம்பிலிபிட்டியவில் ஆசிரியை ஒருவரை தாக்கிய ஆசிரியர் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு தேசிய மக்கள் சக்தியின் மொனராகலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சதுரி கங்கானி வலியுறுத்தியுள்ளார்.
எம்பிலிபிட்டிய கல்வி வலயத்திற்குட்பட்ட ஒரு பாடசாலையில் பணிபுரியும் ஆசிரியை ஒருவர், அதே பள்ளியில் பணிபுரியும் மற்றொரு ஆசிரியரால் நேற்று (2025 மார்ச் 07) அன்று தாக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் பாடசாலையின் பெண் அதிபரின் முன்னிலையில் நடந்ததாகவும், தாக்குதலுக்குள்ளான ஆசிரியை தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெறுகிறாரென்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சதுரி கங்கானி இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தினார்.
இதற்குப் பதிலளித்த பிரதமர் ஹரிணி அமரசூரிய, இந்த சம்பவம் குறித்து இன்று காலை தான் அறிந்ததாகவும், இது தொடர்பாக கல்வி அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டு, இதற்கு நிச்சயமாக ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.
