'கிரிப்டோ' பண வணிகம் தொடர்பில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை!
பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பரவலாக விளம்பரப்படுத்தப்பட்டு வரும் மோசடியான 'கிரிப்டோ' பண வணிகம் தொடர்பாக பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பிரதமர் அலுவலகம் வெளியிட்ட விசேட அறிக்கையில், பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் பிற பிரபல இலங்கை பிரமுகர்களின் பெயர்கள் பயன்படுத்தப்பட்டு, தவறான தகவல்களை பரப்பி பொதுமக்களை ஏமாற்ற முயற்சி செய்யப்படும் மோசடி விளம்பரங்கள் பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குற்றவாளிகளின் தந்திரம்
இந்நிலையில், அரச அதிகாரிகள் மற்றும் பிரபலங்களின் அங்கீகாரம் பெற்றதாகத் தவறாகக் கூறி, கிரிப்டோ பண முதலீடுகளை ஊக்குவிக்கும் விளம்பரங்களிடம் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
மேலும், லிதுவேனியாவிலிருந்து இயக்கப்படும் சில மோசடி கணக்குகள் இலங்கையில் பேஸ்புக் பயனர்களை இலக்காகக் கொண்டு தவறான விளம்பரங்கள் மற்றும் பிரசாரங்களை தீவிரமாக மேற்கொண்டு வருவதாகவும் பிரதமர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
மக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்
- பிரபலமானவர்களின் பெயர்களை பயன்படுத்தும் எந்தவொரு முதலீட்டு அழைப்புகளையும் நம்ப வேண்டாம்.
- சமூக ஊடகங்களில் காணப்படும் சந்தேகமான விளம்பரங்கள் மற்றும் இணைப்புகளை கிளிக் செய்யாமல் இருக்க வேண்டும்.
- முதலீடுகளுக்கு முன்னதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் மற்றும் நம்பகமான வழிநடத்தல்களைப் பெற வேண்டும்.
பொதுமக்கள் இத்தகைய மோசடி நடவடிக்கைகளை சந்தித்தால், அரச அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் வழங்குமாறு பிரதமர் அலுவலகம் கேட்டுக்கொண்டுள்ளது.
