திருமணம் செய்யாவிட்டால் வேலை இல்லை! - ஊழியர்களுக்கு அனுப்பப்பட்ட கடிதம்


சீனாவின் ஒரு நிறுவனம், அதன் ஊழியர்களை திருமணம் செய்துகொள்ள வலியுறுத்தியுள்ள செய்தி வெளிநாட்டு ஊடகங்களில் பரவியுள்ளது.

இந்த நிறுவனம், மார்ச் மாத இறுதிக்குள் திருமணம் செய்து கொள்ளாத ஊழியர்களை வேலையில் இருந்து நீக்குவதாக ஒரு அறிவுறுத்தல் கடிதம் அனுப்பியுள்ளது. மேலும், குறித்த மாதத்தின் பின்னர் திருமணம் செய்யாவிடின், ஊழியர்கள் தங்களின் தனிப்பட்ட நிலையை பற்றிய சுய விமர்சனக் கடிதமொன்றை தர வேண்டும் என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த உத்தரவு பல்வேறு தரப்பிலிருந்தும் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியதால், பின்னர் அது திரும்பப் பெறப்பட்டதாக கூறப்படுகிறது.

சீனாவில், அதிக விலைவாசி மற்றும் வாழ்க்கைச் செலவுகளின் காரணமாக இளைஞர்கள் திருமணம் செய்துகொள்வதை தவிர்க்கின்றனர். இதனால், மக்கள் தொகை மற்றும் திருமணங்கள் குறைந்து வருவதாக கூறப்படுகிறது.

பல்வேறு நாடுகளில் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்து வருவதால், எதிர்காலத்தில் இந்த நிலை பல பிரச்சினைகளைக் கொண்டுவர வாய்ப்பு உள்ளது என்பதனால் சில நிறுவனங்கள் திருமணம் ஆகாத தனது ஊழியர்களை இவ்வாறு திருமணம் செய்ய வலியுறுத்தி வருகின்றன.