‘TM App’ செயலி தடைசெய்யப்பட்ட நிதித் திட்டங்கள் பட்டியலில் இணைப்பு!


இலங்கையில் தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டத்தில் ஈடுபட்டு, அதனை நடத்தி விளம்பரப்படுத்தியதாக கண்டறியப்பட்ட ‘TM App’ செயலி, இலங்கை மத்திய வங்கியின் தடைசெய்யப்பட்ட நிதித் திட்டங்களின் பட்டியலில் புதிதாக இணைக்கப்பட்டுள்ளது.

1988 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க வங்கிச் சட்டத்தின் (திருத்தப்பட்ட) 83(C) பிரிவின் கீழ் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, ஆகஸ்ட் 5 ஆம் திகதி வெளியிட்ட அறிவிப்பில் இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இதன்படி, வங்கிச் சட்டத்தின் கீழ் தடைசெய்யப்பட்ட நிதித் திட்டங்களை நடத்தும் நிறுவனங்கள் மற்றும் செயலிகளின் பட்டியலில் தற்போது ‘TM App’ செயலியும் இடம்பெற்றுள்ளது.

மத்திய வங்கியினால் புதுப்பிக்கப்பட்ட பட்டியலில் Qnet/Questnet, MTFE, OnmaxDT, Fruugo Online, Beecoin App, Windex Trading, Smart Win Entrepreneur, Infinity Rover (Pvt) Ltd உள்ளிட்ட மொத்தம் 26 நிறுவனங்கள் மற்றும் செயலிகள் சேர்க்கப்பட்டுள்ளன.

தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டங்கள் தொடர்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், இலங்கை மத்திய வங்கியின் நிதி நுகர்வோர் உறவுகள் திணைக்களம் இந்த எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மேலும், புதிய உறுப்பினர்களை இணைப்பதை அடிப்படையாகக் கொண்ட முதலீட்டுத் திட்டங்கள் அல்லது நடைமுறைக்கு சாத்தியமற்ற அளவில் அதிக இலாபம் வழங்குவதாகக் கூறப்படும் திட்டங்களில் முதலீடு செய்வதை தவிர்க்குமாறும் மத்திய வங்கி பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

எந்தவொரு முதலீட்டையும் மேற்கொள்வதற்கு முன்னர், அதன் நம்பகத்தன்மை மற்றும் சட்டபூர்வமான தன்மையை உறுதிப்படுத்திக்கொள்ளுமாறும் இலங்கை மத்திய வங்கி வலியுறுத்தியுள்ளது.