“வேளாண் பட்ஜெட்டில் உருப்படியாக எந்தத் திட்டமும் இல்லை” – உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!
தவெக அரசின் முதல் வேளாண் பட்ஜெட்டில் புதிய திட்டங்கள் எதுவும் இடம்பெறவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
தவெக ஆட்சி அமைந்த பிறகு முதல்முறையாக தாக்கல் செய்யப்பட்ட வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் வினோத் 129 நிமிடங்கள் வாசித்தார். ஆனால், தேர்தல் வாக்குறுதிகளில் கூறப்பட்ட அம்சங்கள் இடம்பெறாதது விவசாயிகள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த உதயநிதி ஸ்டாலின், “வேளாண் பட்ஜெட் என்பதைவிட முதல்வரைப் புகழ்ந்து வாசிக்கப்பட்ட உரையாகவே உள்ளது. இதில் புதிதாக எந்தத் திட்டமும் இல்லை. காவிரி நீர் பிரச்சினை, விவசாயிகளின் சிக்கல்கள் குறித்து எந்த அறிவிப்பும் இடம்பெறவில்லை” என விமர்சித்தார்.
மேலும், “கடந்த 3 மாதங்களாக விவசாயிகள் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகின்றனர். முழு பயிர்க்கடன் தள்ளுபடி செய்வோம் என்று கூறிய தவெக அரசு தற்போது அதை நிறைவேற்றவில்லை. மேகதாது அணை விவகாரம், குறுவை சாகுபடி பாதிப்பு உள்ளிட்ட பிரச்சினைகளில் விவசாயிகள் பெரும் பாதிப்பை எதிர்கொள்கின்றனர்” என்றார்.
திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களின் பெயர்களை மாற்றி புதிய திட்டங்களைப் போல அறிவித்துள்ளதாக குற்றம்சாட்டிய அவர், “உருப்படியாக எந்த அறிவிப்பும் இல்லை. பயிர்க்கடன் தள்ளுபடி செய்வேன் என்று தொடர்ந்து கூறிய விஜய், தற்போது அதுகுறித்து எந்த பதிலும் அளிக்கவில்லை” என தெரிவித்தார்.
காவிரி விவகாரம் தொடர்பாக விஜய் மௌனம் காப்பதாகவும் குற்றம்சாட்டிய உதயநிதி, “காவிரி பிரச்சினை குறித்து சட்டப்பேரவையில் விவாதிக்க ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வர சபாநாயகரிடம் கடிதம் அளித்துள்ளோம். முதல்வர் விஜய் இதற்கு பதில் அளிப்பார் என எதிர்பார்க்கிறோம். திமுக எப்போதும் விவசாயிகளுக்கு ஆதரவாக இருக்கும்” என கூறினார்.
