வெள்ளப்பெருக்கை தொடர்ந்து தொற்று நோய்கள் பரவும் அபாயம் – மக்களுக்கு எச்சரிக்கை!
வெள்ளப்பெருக்கின் தாக்கத்தை தொடர்ந்து, நாட்டின் சில பகுதிகளில் வயிற்றுப்போக்கு மற்றும் எலிக்காய்ச்சல் உள்ளிட்ட தொற்று நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன்படி, மேல், தென், மத்திய மற்றும் சபரகமுவ ஆகிய நான்கு மாகாணங்களில் தொற்று நோய்கள் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக சங்கத்தின் பிரதான செயலாளர் சமில் முத்துகுட தெரிவித்துள்ளார்.
வயிற்றுப்போக்கு, மஞ்சள் காமாலை, தோல் நோய்கள் மற்றும் டெங்கு உள்ளிட்ட நோய்களுக்கான அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக அருகிலுள்ள அரச வைத்தியசாலை அல்லது அங்கீகரிக்கப்பட்ட வைத்தியரிடம் சென்று சிகிச்சை மற்றும் மருத்துவ ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளுமாறு அவர் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், அசுத்தமான நீரின் மூலம் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் காணப்படுவதால், அதனைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், அருகிலுள்ள சுகாதார பரிசோதகர் அலுவலகம் அல்லது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் ஊடாக இலவசமாக மருந்துகளைப் பெற்றுக்கொள்ளும் வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
