காற்று மாசுபாட்டால் இலங்கையில் ஆண்டுதோறும் 7,000 மரணங்கள் பதிவு!
காற்று மாசுபாட்டின் தாக்கம் காரணமாக இலங்கையில் ஆண்டுதோறும் சுமார் 7,000 பேர் உயிரிழப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட சுகாதார அமைச்சின் சுற்றுச்சூழல் சுகாதாரம் மற்றும் தொழில்சார் சுகாதாரப் பிரிவு பணிப்பாளர் டாக்டர் சந்தனி விதானா இதனைத் தெரிவித்துள்ளார்.
உலகளவில் ஆண்டுதோறும் 7 முதல் 8 மில்லியன் மக்கள் காற்று மாசுபாட்டினால் உயிரிழப்பதாகவும், இலங்கையிலும் இந்தப் பிரச்சினை தீவிரமடைந்து வருவதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.
காற்றில் காணப்படும் மிக நுண்ணிய தீங்கு விளைவிக்கும் துகள்கள் சுவாசத்தின் ஊடாக நுரையீரலுக்குள் சென்று இரத்த ஓட்டத்திலும் கலக்கக்கூடும். இதனால் ஆஸ்துமா, மூச்சுக்குழாய் அழற்சி, நாள்பட்ட நுரையீரல் நோய்கள், மாரடைப்பு, இதய நோய்கள் மற்றும் பக்கவாதம் போன்ற பல்வேறு உடல்நலப் பாதிப்புகள் ஏற்படக்கூடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், வீடுகளுக்குள் ஏற்படும் காற்று மாசுபாடு வெளிப்புற காற்று மாசுபாட்டை விட ஐந்து மடங்கு அதிகமாக இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறிப்பாக, காற்றோட்டம் இல்லாத மூடிய இடங்களில் விறகு அடுப்பு மற்றும் மண்ணெண்ணெய் அடுப்புகளைப் பயன்படுத்துவதால் தீங்கு விளைவிக்கும் புகை தேங்கி, பெண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் உள்ளிட்ட கடுமையான சுகாதாரப் பிரச்சினைகள் ஏற்படும் அபாயம் அதிகரிப்பதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
