“பேப்பர் படித்தால் நாட்டில் என்ன நடக்கிறது என்று தெரியும்” என்ற முதலமைச்சர் விஜய்– உதயநிதி ஸ்டாலின் பதிலடி!
தமிழ்நாடு சட்டமன்றத்தில் பேப்பர் படித்தால் நாட்டில் என்ன நடக்கிறது என்பது தெரியும் என முதலமைச்சர் விஜய் கூறியதற்கு, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழ்நாடு அரசின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்றைய கூட்டத்தில் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசிய உதயநிதி ஸ்டாலின், தவெக அரசு அமைந்த பின்னர் மேகதாது அணை கட்டும் விவகாரத்தில் கர்நாடக அரசு வேகம் காட்டி வருவதாக குற்றம்சாட்டினார்.
மேலும், “இந்த விவகாரத்தில் தமிழக அரசு இதுவரை செய்தது என்ன? அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட ஆளும் அரசு தயங்குவது ஏன்? தமிழ்நாட்டின் ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் அனைத்துக்கட்சி கூட்டத்தை எப்போது கூட்டப் போகிறீர்கள்?” என அவர் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த முதலமைச்சர் விஜய், காவிரி விவகாரத்தில் ஒரு முயற்சியாக பெங்களூருவுக்கு செல்வது குறித்து தாம்தான் யோசித்து கேட்டதாகவும், அந்தப் பயணத்தால் அவமானம் ஏற்பட்டாலும் தமிழ்நாட்டு மக்களுக்காக அதைத் தாங்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும், காவிரி விவகாரம் தொடர்பாக நீர்வளத்துறை அமைச்சர் உரிய விளக்கம் அளிப்பார் என்றும், குறுவை சாகுபடிக்கான நிவாரணம் ஏற்கனவே வழங்கப்பட்டுவிட்டதாகவும் கூறிய விஜய், “முன்ன, பின்ன பேப்பர் படித்திருந்தால் நாட்டில் என்ன நடக்கிறது என்பது தெரிந்திருக்கும்” என விமர்சித்தார்.
இதற்கு பதிலடி கொடுத்த உதயநிதி ஸ்டாலின், “அரசு கொடுத்தது சிறப்பு தொகுப்பு. ஆனால் இப்போது விவசாயிகளுக்கானது வறட்சி நிவாரண நிதி. இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தை தெரிந்துகொள்ளுங்கள்.
இதற்கு தினமும் காலையில் பேப்பர் படித்தால் மட்டும் போதாது. விவசாயிகளையும், அனைத்து கட்சிகளையும் சந்திக்க வேண்டும். தமிழ்நாடு அரசு அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டுவதற்கு என்ன பயம்?” என கேள்வி எழுப்பினார்.
இதனிடையே, வறட்சி நிவாரண நிதி தொடர்பான கணக்கெடுப்பு செப்டம்பர் மாதத்திற்குப் பின்னரே மேற்கொள்ளப்படும் என அவை முன்னவர் செங்கோட்டையன் விளக்கம் அளித்தார்.
