சிறுமியை கடுமையாக தாக்கிய நிலையில் அனாதரவாக வீதியில் விட்டுச் சென்ற முச்சக்கர வண்டி!


கண்டி – வத்தேகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யட்டிராவன பகுதியில் இன்று (13) காலை சிறுமி ஒருவரை முச்சக்கர வண்டியில் அழைத்து வந்த சிலர், அவரை வீதியில் இறக்கிவிட்டு தப்பிச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தாக்கப்பட்ட நிலையில் காணப்பட்ட குறித்த சிறுமியை வத்தேகம பொலிஸார் மீட்டு, சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

பத்து வயதிற்கு உட்பட்டதாக கருதப்படும் அந்தச் சிறுமி, தனது பெயர் ஆயிஷா எனவும், தனது தந்தையின் பெயர் ராசிக் எனவும் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சிறுமியின் புகைப்படத்தை வெளியிட்டுள்ள பொலிஸார், அவரை அடையாளம் காண்பதற்கோ அல்லது அவரது குடும்பத்தினர் தொடர்பில் தகவல் வழங்குவதற்கோ உதவக்கூடியவர்கள் உடனடியாக வத்தேகம பொலிஸாரை தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.

சிறுமியின் பெற்றோரே அவரை கைவிட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், சம்பவத்துடன் தொடர்புடையவர்களை அடையாளம் கண்டு கைது செய்வதற்கான விசாரணைகள் மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை பொலிஸார் தீவிரப்படுத்தியுள்ளனர்.

மேலும், சிறுமியின் உடலில் தொடர்ச்சியான துன்புறுத்தல்களுக்கு உள்ளானதைக் காட்டும் காயங்கள் மற்றும் அடையாளங்கள் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து, சிறுமியின் உடல்நிலை மற்றும் காயங்கள் தொடர்பில் விரிவான மருத்துவ அறிக்கையைப் பெற்றுக்கொள்ளவும் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வத்தேகம பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.