மலேசியாவில் கைதுசெய்யப்பட்ட பிரபல பாதாள குழு செயற்பாட்டாளர்களாக கருதப்படும் மூவர் இன்று நாட்டிற்கு!


மலேசியாவில் கைது செய்யப்பட்ட பிரபல பாதாள உலகக் குழு செயற்பாட்டாளர்களாக கருதப்படும் மூவர் இன்று இலங்கைக்கு அழைத்து வரப்படவுள்ளனர்.

உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஒலுகல தலைமையில் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது குறித்த மூவரும் மலேசியாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேக நபர்கள், தேடப்பட்டு வரும் கஞ்சிப்பானை இம்ரானின் பிரதான சகாக்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவரான இரத்மலானை சைமாவுக்கு எதிராக சர்வதேச பொலிஸாரால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், விசேட பாதுகாப்புடன் இலங்கைக்கு அழைத்து வரப்படும் மூன்று சந்தேக நபர்களும் மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக பொலிஸ் தலைமையகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கஞ்சிப்பானை இம்ரானை கைது செய்யும் நோக்கில் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் உள்ளிட்ட குழுவினர் மலேசியாவிற்கு சென்றிருந்த போதிலும், குறித்த நடவடிக்கையை கைவிட்டு இலங்கைக்கு திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

எனினும், கஞ்சிப்பானை இம்ரானை கைது செய்வதற்கான சோதனை நடவடிக்கைகளை மலேசிய பொலிஸாரும் இன்டர்போல் அமைப்பும் தீவிரப்படுத்தியுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.