வடக்கு உள்ளிட்ட மூன்று மாகாணங்களில் ஆசிரியர் வெற்றிடங்களுக்கு விரைவில் ஆட்சேர்ப்பு – பிரதமர் அறிவிப்பு!


வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையில், இந்த ஆண்டின் இறுதிக்குள் ஆசிரியர் ஆட்சேர்ப்புக்கு அரசாங்கம் முன்னுரிமை வழங்கும் என பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று (06) நடைபெற்ற கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி தொடர்பான அமைச்சர்கள் கலந்தாய்வுக் குழுக் கூட்டத்தில் உரையாற்றிய போதே பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.

குறித்த மூன்று மாகாணங்களிலும் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு விசேட கவனம் செலுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், எதிர்காலத்தில் இப்பகுதிகளில் மீண்டும் ஆசிரியர் பற்றாக்குறை ஏற்படாத வகையில் நீண்டகால திட்டமொன்று அவசியம் எனவும் பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் முன்னெடுக்கப்பட்டு வரும் பாடசாலை கட்டிடங்கள் மற்றும் உட்கட்டமைப்பு அபிவிருத்தித் திட்டங்களை துரிதப்படுத்துமாறும் அவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இதன்போது, மனிதவள முகாமைத்துவம் மற்றும் உயர்கல்வி உள்ளிட்ட துறைகள் தொடர்பில் பிரதமரின் மேற்பார்வையில் இயங்கும் உட்குழுக்களின் முன்னேற்றம் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.