இளைஞர்களிடையே அதிகரிக்கும் குடல் சார்ந்த நோய்கள் தொடர்பில் வைத்திய நிபுணர் எச்சரிக்கை!
இளைஞர்கள் மத்தியில் குடல் சார்ந்த நோய்கள் அதிகரித்து வருவதாக இரைப்பை குடல் மற்றும் கல்லீரல் வைத்திய நிபுணர் சுபுன் குலதுங்க தெரிவித்துள்ளார்.
இளம் தலைமுறையினர் செயற்கை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகளவில் உட்கொள்வதில் ஆர்வம் காட்டுவது இதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
குடலுக்கும் மூளைக்கும் இடையே சிக்கலான தொடர்பு காணப்படுவதாகவும், இது ‘குடல் – மூளை அச்சு’ (Gut-Brain Axis) என அழைக்கப்படுவதாகவும் வைத்திய நிபுணர் தெரிவித்துள்ளார்.
அதிக மன அழுத்தம் அல்லது பதற்றம் ஏற்படும்போது அதன் தாக்கம் குடலிலும் உணரப்படுவதாகவும், மனநிலை மற்றும் உணவுப் பழக்கவழக்கங்களில் ஏற்படும் மாற்றங்கள் இணைந்து IBS எனப்படும் எரிச்சலூட்டும் குடல் நோய்க்குறி ஏற்படுவதற்கு வழிவகுக்கலாம் என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.
தற்போது இந்நிலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கவழக்கங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்களால், காய்கறிகள், பழங்கள், கீரை வகைகள் மற்றும் தானியங்கள் உள்ளிட்ட இயற்கை உணவுகளில் இருந்து பல இளைஞர்கள் விலகி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலகுவாகக் கிடைப்பதன் காரணமாக செயற்கை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகளவில் நாடுவதால், இளைஞர்கள் மத்தியில் IBS உள்ளிட்ட குடல் சார்ந்த பிரச்சினைகள் அதிகரித்து வருவதாக வைத்திய நிபுணர் சுபுன் குலதுங்க தெரிவித்துள்ளார்.
