நீதிபதிகளின் ஓய்வு வயது நீடிப்பு தொடர்பில் சட்டத்தரணிகள் சங்கத்துடன் ஜனாதிபதி கலந்துரையாடல்!


ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (12) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

சுமார் ஒரு மணித்தியாலத்திற்கும் மேலாக நடைபெற்ற இக்கலந்துரையாடலில், நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது எல்லையை நீடிப்பது தொடர்பான 22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் குறித்து முக்கியமாக கலந்துரையாடப்பட்டது. இதன்போது, குறித்த விடயம் தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் கருத்துகள் மற்றும் ஆலோசனைகள் ஜனாதிபதியிடம் முன்வைக்கப்பட்டன.

முன்வைக்கப்பட்ட கருத்துகளை கவனத்தில் கொண்ட ஜனாதிபதி, இந்த விவகாரம் தொடர்பான அரசாங்கத்தின் நிலைப்பாட்டையும், நீதித்துறை கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக அரசாங்கம் முன்னெடுத்து வரும் நடவடிக்கைகளையும் விளக்கினார்.

நீதியை நிலைநாட்டுவது நீதிமன்றங்களால் மாத்திரம் மேற்கொள்ளப்படும் செயற்பாடு அல்ல என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, விசாரணைகள், வழக்குத் தாக்கல் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகள் உள்ளிட்ட அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயற்பட வேண்டியுள்ளதாக தெரிவித்தார்.

இதற்கமைய, சட்டமா அதிபர் திணைக்களம், இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களை விசாரிக்கும் ஆணைக்குழு, இலங்கை பொலிஸ் மற்றும் அரசாங்க பகுப்பாய்வாளர் திணைக்களம் ஆகிய நிறுவனங்களின் மனிதவளத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

மேலும், இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான விசாரணை சேவைகளை மாவட்ட மட்டத்தில் விரிவுபடுத்தவும், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

பொதுமக்கள் இலகுவாக நீதியை அணுகும் வகையில், மேன்முறையீட்டு நீதிமன்ற நடவடிக்கைகளை மாகாண மட்டத்திலும் முன்னெடுப்பதற்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி கூறினார்.

அத்துடன், மக்களுக்கு நீதிமன்றச் சேவைகளை மேலும் இலகுபடுத்தும் வகையில் மேல்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதுடன், நீதிமன்றங்களுக்குத் தேவையான பௌதிக வசதிகளை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது எல்லையை நீடிப்பது தொடர்பான தீர்மானம் எந்தவொரு தனிநபரையோ அல்லது குழுவையோ இலக்காகக் கொண்டதல்ல என்றும், நாட்டின் பொதுநலனை அடிப்படையாகக் கொண்டே இந்த நடவடிக்கை முன்மொழியப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

இவை நாட்டின் நீதித்துறை மற்றும் சட்ட அமுலாக்கக் கட்டமைப்பில் காணப்படும் பரந்தளவிலான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான மறுசீரமைப்புகளின் ஒரு பகுதியாகும் என்றும், இது தனது தனிப்பட்ட கருத்தோ அல்லது அரசாங்கத்தின் தனிப்பட்ட கருத்தோ அல்ல என்றும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.

இதனிடையே, நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரித்தல் மற்றும் நீதிபதிகளின் ஓய்வு வயது எல்லையை நீடித்தல் உள்ளிட்ட விடயங்களில் கொள்கை ரீதியான எதிர்ப்புகள் எதுவும் இல்லை என இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

எனினும், நீதிபதிகளின் ஓய்வு வயது எல்லையை நீடிப்பது தொடர்பான தீர்மானத்தை மேலும் ஆராய்ந்து, அனைத்து தரப்பினருக்கும் இடையில் பொதுவான இணக்கப்பாட்டை ஏற்படுத்துவது பொருத்தமானது என அவர்கள் பரிந்துரைத்தனர்.

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நானாயக்கார, ஜனாதிபதியின் சட்ட ஆலோசகர் சட்டத்தரணி ஜே.எம். விஜேபண்டார மற்றும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி ரஜீவ் அமரசூரிய உள்ளிட்ட சங்கத்தின் சிரேஷ்ட பிரதிநிதிகள் பலரும் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றனர்.