இணையவழி நிதி மோசடி: 2026ஆம் ஆண்டில் மாத்திரம் 1,093 வெளிநாட்டவர்கள் கைது!
இணையவழி நிதி மோசடிகளுக்கு எதிராக இலங்கைப் பொலிஸார் மேற்கொண்டு வரும் தீவிர நடவடிக்கைகளின் காரணமாக, 2026ஆம் ஆண்டில் மட்டும் 1,093 வெளிநாட்டுப் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளரும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகருமான எஃப்.யு. வூட்லர் தெரிவித்துள்ளார்.
27 சைபர் குற்றச் சம்பவங்கள் தொடர்பிலேயே இந்த 1,093 வெளிநாட்டவர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், 2026ஆம் ஆண்டில் வெளிநாட்டவர்களின் கைதுகள் கணிசமாக அதிகரித்துள்ளன.
- 2026: 27 சம்பவங்களில் 1,093 வெளிநாட்டவர்கள் கைது
- 2025: 2 சம்பவங்களில் 26 வெளிநாட்டவர்கள் கைது
- 2024: 26 சம்பவங்களில் 573 வெளிநாட்டவர்கள் கைது
சமூக வலைத்தளங்கள் ஊடாக மேற்கொள்ளப்படும் நிதி மோசடிகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில் தீவிரப்படுத்தப்பட்ட சோதனைகள், கைதுகள் மற்றும் விழிப்புணர்வுப் பிரசாரங்களின் தொடர்ச்சியாக இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த இணையவழி நிதி மோசடிகளால் உள்நாட்டவர்கள் மட்டுமன்றி வெளிநாட்டவர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் வூட்லர் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை நாடு கடத்துவது உள்ளிட்ட சட்ட நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்துவதற்கும் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
வெளிநாட்டவர்களுக்கு இடம் வாடகைக்கு விடுவோருக்கு அறிவுறுத்தல்
வெளிநாட்டுப் பிரஜைகளுக்கு வீடுகள், விடுதிகள் அல்லது வர்த்தக நிலையங்களை வாடகைக்கு வழங்குவதற்கு முன்னர், அவர்களின் வியாபாரப் பதிவு மற்றும் அடையாள ஆவணங்களை முறையாகச் சரிபார்க்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.
மேலும், சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகள் தொடர்பில் தகவல் கிடைத்தால், அவை குறித்து அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு உடனடியாக அறிவிக்குமாறும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
