இலங்கையில் 91 ஆயிரத்தை கடந்த டெங்கு நோயாளர்கள்!
இலங்கையில் இந்த ஆண்டில் இதுவரை பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 91,000ஐ கடந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்படி, நேற்று (13) வரையான தரவுகளின் அடிப்படையில், நாட்டில் மொத்தமாக 91,346 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டெங்கு நோய் காரணமாக இதுவரை 68 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
இந்த ஆண்டில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் ஜூலை மாதத்திலேயே பதிவாகியுள்ளனர். அந்த மாதத்தில் மாத்திரம் 29,968 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, ஓகஸ்ட் மாதம் 13ஆம் திகதி வரையான முதல் 13 நாட்களில் 6,004 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாகாண ரீதியில், இந்த ஆண்டில் இதுவரை அதிகளவான டெங்கு நோயாளர்கள் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளனர். அங்கு மொத்தமாக 48,383 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து தென் மாகாணத்தில் 13,479 பேரும், மத்திய மாகாணத்தில் 8,160 பேரும் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
