நீர் கட்டணங்களில் மாற்றமா? ஜனவரியில் முக்கிய முடிவு – அமைச்சர் அறிவிப்பு!


நீர் கட்டணங்கள் தொடர்பான மீளாய்வுப் பணிகள் எதிர்வரும் ஜனவரி மாதம் முன்னெடுக்கப்படவுள்ளதாக நீர் வழங்கல் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அந்தக் காலப்பகுதியில் நாட்டில் நிலவும் பொருளாதார நிலைமையை கருத்திற்கொண்டு, நீர் கட்டணங்களை அதிகரிப்பதா, குறைப்பதா அல்லது தற்போதைய கட்டண முறையை தொடர்ந்து நடைமுறைப்படுத்துவதா என்பது தொடர்பில் இறுதி முடிவு எடுக்கப்படும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

கண்டி மாவட்டத்தின் குடிநீர்த் தேவைகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் நோக்கில் கண்டி மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

கண்டி மாவட்டத்தின் குடிநீர்ப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில், தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபைக்கு இந்த ஆண்டு சுமார் 2 பில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிதியின் கீழ் புதிய நீர்க் குழாய்களைப் பதித்தல், பழைய குழாய் கட்டமைப்புகளை சீரமைத்தல், நீர் சுத்திகரிப்பு நிலையங்களைப் புதுப்பித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பல்வேறு காரணங்களால் இடைநிறுத்தப்பட்ட குடிநீர்த் திட்டங்கள் மற்றும் புதிதாக முன்வைக்கப்பட்டுள்ள குடிநீர் தொடர்பான கோரிக்கைகள் அனைத்தும் மதிப்பீடு செய்யப்பட்டு வருவதாகவும், மக்களின் குடிநீர்ப் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வுகளை வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, எல் நினோ காலநிலை மாற்றத்தின் தாக்கத்தால் நாட்டின் பிரதான நீர் மூலாதாரங்களுக்கு இதுவரை குறிப்பிடத்தக்க பாதிப்பு ஏற்படவில்லை எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய காலநிலை மற்றும் நீர்வள சவால்களை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.