சாதாரண தர மறுபரிசீலனை விண்ணப்பங்களுக்கான காலக்கெடு இன்றுடன் நிறைவு!


2025 (2026) கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் மறுபரிசீலனைக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு இன்று (08) நிறைவடைவதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

கடந்த ஜூன் 25ஆம் திகதி தொடங்கியிருந்த இந்த விண்ணப்பச் செயல்முறையில், பாடசாலை மற்றும் தனிப்பட்ட பரீட்சார்த்திகள் அனைவரும் இணையவழி மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் "Exam Information Centre" சேவையின் ஊடாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். ஏற்கனவே பதிவு செய்தவர்கள் பரீட்சை இலக்கம் மற்றும் தேசிய அடையாள அட்டை இலக்கத்தைப் பயன்படுத்தி உள்நுழைய முடியும். புதிய விண்ணப்பதாரர்கள் தேசிய அடையாள அட்டை இலக்கம் மற்றும் கைபேசி இலக்கத்தின் மூலம் பதிவு செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

ஒரு பாடத்திற்கான மறுபரிசீலனைக் கட்டணம் ரூ.200 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளதுடன், கடன் அட்டை, வரவு அட்டை அல்லது தபாலகங்கள் ஊடாக கட்டணத்தைச் செலுத்த முடியும்.

கட்டணம் செலுத்திய பின்னர் விண்ணப்பப் படிவத்தை PDF வடிவில் பதிவிறக்கம் செய்து பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுமாறும், விண்ணப்பம் தொடர்பான உறுதிப்படுத்தல் குறுஞ்செய்தி அனுப்பப்படும் என்றும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலதிக தகவல்களுக்கு 1911 என்ற உதவி இலக்கம் அல்லது 011 278 5231 என்ற உத்தியோகபூர்வ தொலைபேசி இலக்கத்தை தொடர்புகொள்ளலாம் என்றும் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.