புதிய டெங்கு தடுப்பூசியை பெற்றுக்கொள்ள சுகாதார அமைச்சு நடவடிக்கை!


புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள டெங்கு தடுப்பூசியை இலங்கைக்கு பெற்றுக்கொள்வதற்கான அனுமதியை கோரி சுகாதார அமைச்சுக்கு கோரிக்கை கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக சுகாதார பிரதி அமைச்சர் ஹன்சக விஜேமுனி தெரிவித்துள்ளார்.

நாட்டின் தற்போதைய டெங்கு பரவல் நிலைமை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, இந்த மாதத்தில் இதுவரையான காலப்பகுதியில் மட்டும் 26,136 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இது இந்த ஆண்டில் ஒரே மாதத்தில் பதிவான அதிகபட்ச டெங்கு நோயாளர் எண்ணிக்கையாகும்.

எனினும், எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை குறைவடையும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

டெங்கு நோயைத் தடுப்பதற்காக புதிய தடுப்பூசி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதுடன், நோய் ஏற்படுவதற்கு முன்னர் அதனை செலுத்திக்கொள்வதன் மூலம் பாதுகாப்பைப் பெற முடியும் என தெரிவிக்கப்படுகிறது.

இது புதிய தடுப்பூசி என்பதால், டெங்கு தடுப்பில் இதன் செயல்திறன் குறித்து தற்போது உறுதியாக கூற முடியாது எனவும், இருப்பினும் பல நாடுகள் இதற்கு அனுமதி வழங்கியுள்ளதாகவும் சுகாதார பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில், குறித்த தடுப்பூசியை இலங்கைக்கு கொண்டு வருவதற்கான அனுமதி கோரப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.