தமிழக பட்ஜெட் தாக்கல்: ஆகஸ்ட் 5-ல் முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா? த.வெ.க அரசின் முதல் பட்ஜெட்!


தமிழக முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) அரசு, தனது முதல் பட்ஜெட்டை ஆகஸ்ட் 5-ஆம் தேதி தாக்கல் செய்ய உள்ளது. புதிய அரசு அமைந்துள்ள நிலையில், இந்த பட்ஜெட்டில் மக்கள் நலத் திட்டங்கள் தொடர்பான முக்கிய அறிவிப்புகள் இடம்பெறுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

தமிழ்நாட்டில் நடைபெற்ற 17-வது சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று த.வெ.க ஆட்சி அமைத்தது. இதையடுத்து, முதல் சட்டமன்றக் கூட்டத்தொடர் ஜூன் 18-ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதங்கள் ஜூன் 19, 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் நடைபெற்றன.

இந்நிலையில், 2026–2027 ஆம் நிதியாண்டுக்கான திருத்திய நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) ஆகஸ்ட் 5-ஆம் தேதி காலை 10 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டமன்ற பேரவை மண்டபத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது.

த.வெ.க தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற பல்வேறு வாக்குறுதிகள் இந்த பட்ஜெட்டில் செயல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, பெண்களுக்கு வழங்கப்படும் மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500 ஆக உயர்த்தப்படும் என்ற அறிவிப்பு வெளியாகுமா என பெண்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது.

மேலும், கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, உள்கட்டமைப்பு மற்றும் மக்கள் நலத் திட்டங்கள் தொடர்பான அறிவிப்புகளும் பட்ஜெட்டில் இடம்பெறலாம் என அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது. புதிய அரசின் முதல் பட்ஜெட் என்பதால், இது அரசியல் ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.