ஜூலை 31 முதல் தமிழ்நாடு, புதுச்சேரியில் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்!


தமிழ்நாடு, புதுச்சேரியில் ஜூலை 31ஆம் தேதி முதல் கறிக்கோழி (பிராய்லர் கோழி) விற்பனை நிறுத்தப்பட உள்ளதாக தமிழ்நாடு கோழி வணிகர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

கோழி எடை மோசடிகளைத் தடுத்து நிறுத்தக் கோரி, கறிக்கோழி விற்பனையாளர்கள் காலவரையற்ற கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ள வணிகர்கள், விற்பனைக்கு அனுப்பப்படும் கோழிகளின் எடையில் முறைகேடு நடைபெறுவதாக தெரிவித்துள்ளனர்.

விற்பனைக்கு அனுப்புவதற்கு முன்பாக கோழிகளுக்கு தீவனக் கட்டுப்பாடு முறையை உற்பத்தி நிறுவனங்கள் முறையாகப் பின்பற்றுவதில்லை என வணிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனால், கோழிகளின் கழிவுகள் இறைச்சியில் கலப்பதாகவும், எடை மோசடி காரணமாக விற்பனையாளர்கள் பொருளாதார இழப்பை சந்திப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கோழி எடை மோசடிகளைத் தடுக்கவும், உற்பத்தி நிறுவனங்கள் வழக்கமான தீவனக் கட்டுப்பாடு நடைமுறையை உடனடியாக அமல்படுத்தவும் வலியுறுத்தி இந்த போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் உள்ள மொத்த மற்றும் சில்லரை கறிக்கோழி விற்பனையாளர்களும் இந்த போராட்டத்தில் பங்கேற்க உள்ளனர். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பகுதிகளில் உள்ள சுமார் 60,000 கடைகளில் கறிக்கோழி விற்பனை நிறுத்தப்பட உள்ளதால், ஜூலை 31 முதல் பொதுமக்களுக்கு கறிக்கோழி கிடைப்பதில் தற்காலிக பாதிப்பு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.