நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரம்: 10 கோடி ரூபாவுக்கும் அதிக சொத்துக்கள் சேதம்!


போதைப்பொருள் கடத்தல் வழக்குகளுடன் தொடர்புடைய சில கைதிகள் ஏற்படுத்திய கலவரத்தால், நீர்கொழும்பு சிறைச்சாலையின் கட்டடங்கள் மற்றும் சொத்துக்களுக்கு 10 கோடி ரூபாவுக்கும் (100 மில்லியன்) அதிகமான சேதம் ஏற்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சேதமடைந்த சிறைச்சாலையை முழுமையாக மீளமைக்கும் பணிகள் தற்போது துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கிடையில், பெருமளவிலான கைதிகள் நாட்டின் பிற சிறைச்சாலைகளுக்கு தற்காலிகமாக மாற்றப்பட்டுள்ளனர்.

சிறை நெரிசலைக் குறைக்கும் நோக்கில், போகம்பரை மற்றும் காலி மஹமோதர சிறைச்சாலைகள் மீண்டும் தற்காலிக சிறைகளாக மாற்றப்படவுள்ளதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார். மேலும், காலி மஹமோதர வைத்தியசாலை மற்றும் கேகாலை பரகம்மன தொழிற்துறை களஞ்சியத்தையும் தற்காலிக சிறைகளாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

2025 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட நான்கு மாடிக் கட்டடங்களில் தற்போது கைதிகள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அதேவேளை, வெலிக்கடை மெகசின் மற்றும் கொழும்பு ரிமாண்ட் சிறைச்சாலைகளில் கைதிகளின் உழைப்பைக் கொண்டு 2025 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தற்காலிக கட்டடப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.

446.9 மில்லியன் ரூபா செலவில் இரண்டு புதிய கட்டடங்கள் நிர்மாணிக்கப்பட்டு வருவதுடன், 2026 ஆம் ஆண்டு 100 மில்லியன் ரூபா நிதியில் மேலும் ஒரு புதிய திட்டமும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அந்தத் திட்டம் 2027 ஆம் ஆண்டில் நிறைவடையவுள்ளதுடன், அதன் இரண்டாம் கட்டப் பணிகள் அடுத்த ஆண்டு ஆரம்பிக்கப்படவுள்ளன. மேலும், பயன்பாட்டில் இல்லாத இரண்டு கட்டடங்களை அகற்றிவிட்டு புதிய கட்டடங்களை அமைப்பதற்காக இந்த ஆண்டு 100 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

இதனுடன், பல்லேகலை சிறைக்கட்டடப் பணிகள் 2028 ஆம் ஆண்டில் நிறைவடையும் என்றும், மாத்தறை சிறைச்சாலையை கொட்டவிலவத்தை பகுதிக்கு மாற்றும் திட்டம் 2027 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு சிறைச்சாலை வளாகத்தை ஹொரண மில்லாவ பகுதிக்கு மாற்றுவதற்கான திட்டமிடல் மற்றும் மதிப்பீட்டுப் பணிகளும் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

“சிறைக்கைதிகளும் மனிதர்களே” என்ற கொள்கையின் அடிப்படையில், சிறைச்சாலை நெரிசலைக் குறைக்கும் பல நடைமுறைத் திட்டங்களை அரசாங்கம் செயல்படுத்தி வரும் நிலையில், அவற்றை சீர்குலைக்கும் நோக்கில் திட்டமிட்டு இத்தகைய கலவரங்கள் ஏற்படுத்தப்படுகின்றனவா என்ற சந்தேகம் சமூகத்தில் எழுந்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.