இலங்கையில் TIN பெறாதவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு!
இலங்கையில் 18 வயது நிறைவடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம் (TIN – Taxpayer Identification Number) பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை சுமார் 40 இலட்சம் பேர் அதைப் பெறவில்லை என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தற்போது 13 மில்லியனுக்கும் அதிகமானோர் TIN இலக்கத்தைப் பெற்றுள்ளதாகவும், புதிய சட்ட ஏற்பாடுகளின் அடிப்படையில் மொத்தம் சுமார் 17 மில்லியன் பேர் பதிவு செய்ய வேண்டியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2026ஆம் ஆண்டிற்கான உள்நாட்டு இறைவரி திருத்தச் சட்டத்தின்படி, பொதுமக்களின் அன்றாட மற்றும் வணிக நடவடிக்கைகளில் பல முக்கிய சேவைகளுக்கு TIN இலக்கம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
TIN இலக்கம் அவசியமான சேவைகள்:
- புதிய வங்கி கணக்குகளைத் திறத்தல்
- வாகனப் பதிவு நடவடிக்கைகள்
- வணிக நிறுவனங்களைப் பதிவு செய்தல்
- பங்கு பரிமாற்ற நடவடிக்கைகள்
- புதிய கடன் அட்டைகளைப் பெறுதல்
மேலும், TIN இலக்க நடைமுறை குறித்து விளக்கமளித்த உள்நாட்டு இறைவரித் திணைக்களம், எதிர்காலத்தில் பல்வேறு அரசு மற்றும் தனியார் சேவைகளில் இந்த இலக்கம் பரவலாகப் பயன்படுத்தப்படவுள்ளதால், இது இனிமேல் இரகசியத் தகவலாகக் கருதப்படமாட்டாது என தெரிவித்துள்ளது.
எனவே, 18 வயது நிறைவடைந்தும் இதுவரை TIN இலக்கத்தைப் பெறாதவர்கள், சட்ட சிக்கல்களைத் தவிர்ப்பதற்கும் சேவைகளை இடையூறு இன்றி பெறுவதற்கும் விரைவாகப் பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
