பொலிஸ் சேவை - பொதுமக்களின் கருத்துக்களைப் பெற புதிய QR குறியீட்டு முறைமை அறிமுகம்!
இலங்கை பொலிஸாரால் வழங்கப்படும் சேவைகள் தொடர்பாக பொதுமக்களின் கருத்துகள், முறைப்பாடுகள், பாராட்டுகள் மற்றும் ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்வதற்காக புதிய QR குறியீட்டு (QR Code) முறைமை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கமைய, நாடு முழுவதும் உள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களின் சேவைகள் குறித்தும் பொதுமக்கள் தமது கருத்துகளை நேரடியாக வழங்கும் வகையில் “Sri Lanka Police Community Feedback Portal” என்ற இணையவழி டிஜிட்டல் தளம் செயல்படுத்தப்பட உள்ளது.
இந்தத் திட்டத்தின் மூலம் குடிமக்கள்:
• கருத்துகளைப் பதிவு செய்யலாம்
• முறைப்பாடுகளை சமர்ப்பிக்கலாம்
• பாராட்டுகளைத் தெரிவிக்கலாம்
• ஆலோசனைகளை வழங்கலாம்
தேவைப்பட்டால் தனிப்பட்ட தகவல்களையும் வழங்க முடியும். மேலும், பொலிஸ் நிலையத்திற்கு வந்ததற்கான காரணம் அல்லது சம்பவ விவரங்களையும் பதிவு செய்யும் வசதி இதில் இடம்பெற்றுள்ளது.
அதேபோல், இலங்கை பொலிஸின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் E-Services பகுதியின் மூலமாகவும் இந்த Community Feedback Portal தளத்தை அணுகி கருத்துகளை பதிவு செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் எளிதில் பயன்படுத்தும் வகையில் அனைத்து பொலிஸ் நிலையங்களின் வரவேற்புப் பிரிவு மற்றும் முறைப்பாட்டுப் பிரிவுகளுக்கு அருகில் QR குறியீட்டு பலகைகள் காட்சிப்படுத்தப்படவுள்ளன.
இந்தச் சேவையைப் பயன்படுத்த பொதுமக்களுக்கு தேவையான வழிகாட்டுதல்களை வழங்குமாறு அனைத்து சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகளுக்கு (OIC) அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
.jpeg)