ஐந்தில் ஒரு பாடசாலை மாணவர் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிப்பு!


இலங்கையில் ஐந்தில் ஒரு பாடசாலை மாணவர் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் கலாநிதி அனில் ஜசிங்க தெரிவித்துள்ளார்.

தேசிய ஊட்டச்சத்து மாதத்தை முன்னிட்டு சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றிய போதே அவர் இந்தத் தகவலை வெளியிட்டார்.

ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்படும் குழந்தைகள், எதிர்காலத்தில் உடல் பருமன் உள்ளிட்ட பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் அபாயம் காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஐந்து வயதுக்குட்பட்ட மற்றும் அதற்கு மேற்பட்ட குழந்தைகள் தொடர்பான அண்மைய கணக்கெடுப்புத் தரவுகளின்படி,

  • வளர்ச்சி குன்றல் விகிதம் 10.1%
  • எடை குறைவு விகிதம் 16.1%
  • அதிக எடை கொண்டோரின் விகிதம் 0.5%

என பதிவாகியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேலும், பெரியவர்களிடையே உடல் பருமன் அதிகரித்து வருவது கவலைக்குரிய விடயமாக இருப்பதாக குறிப்பிட்ட அவர், பெண்களில் 47% பேரும் ஆண்களில் 30% பேரும் உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

சமநிலையான உணவுப் பழக்கம் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவிப்பதன் மூலம் இந்த சவால்களை எதிர்கொள்ள முடியும் எனவும் அவர் வலியுறுத்தினார்.