எரிபொருள் விலை உயர்வு: பேருந்து கட்டண திருத்தம் குறித்து கலந்துரையாடல்!
எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு நிகராக பேருந்து கட்டணங்களை உயர்த்துவது தொடர்பான கலந்துரையாடல் இன்று (04) நெடுஞ்சாலைகள் அமைச்சில் நடைபெற்றுள்ளது.
இந்த விடயம் தொடர்பாக போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்கவுடன் விரைவில் சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்து தருவதாக அமைச்சரின் தனிப்பட்ட செயலாளர் பேருந்து சங்க பிரதிநிதிகளிடம் தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கில் நிலவும் சூழ்நிலை காரணமாக அண்மையில் டீசல் விலை இரண்டு கட்டங்களாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் ஒரு மாத காலத்திற்குள் லீற்றருக்கு மொத்தமாக 25 ரூபாய் அதிகரித்துள்ளதாகவும் பேருந்து சங்கங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
இதனால் பொதுப் போக்குவரத்து சேவையை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்லுவதில் கடுமையான சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், இடைக்கால தீர்வாக 5 சதவீத பேருந்து கட்டண உயர்வை அனுமதிக்குமாறும் அல்லது எரிபொருள் மானியத்தை வழங்குமாறும் பேருந்து சங்கங்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளன.
