மரணச் சான்றிதழ்கள் இனி டிஜிட்டல் முறையில் வழங்கப்படும் – பதிவாளர் நாயகம் திணைக்களம் அறிவிப்பு!
மரணச் சான்றிதழ்களை டிஜிட்டல் முறையில் வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பதிவாளர் நாயகம் திணைக்களம் அறிவித்துள்ளது.
மின்னணு மக்கள் தொகை பதிவேட்டுத் திட்டத்தின் (e-Population Register Programme) கீழ், இந்த திட்டம் முதல் கட்டமாக களுத்துறை மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை கைப்பட எழுதப்பட்டு வழங்கப்பட்டு வந்த மரணச் சான்றிதழ்களுக்கு பதிலாக, இனி கணினி அடிப்படையிலான தரவுத்தளத்தின் ஊடாக சான்றிதழ்கள் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
புதிய டிஜிட்டல் முறையின் மூலம் அதிகாரிகளால் புதுப்பிக்கப்பட்ட தனிப்பட்ட தரவுகளை பராமரிக்கவும், நிறுவனங்களுக்கு இடையில் தகவல்களை விரைவாக பரிமாறிக்கொள்ளவும் முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பாதுகாப்பான தரவுச் சேமிப்பு முறையின் மூலம் தகவல்களின் பாதுகாப்பும் உறுதி செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது.
இந்த முறையில் வழங்கப்படும் ஒவ்வொரு மரணச் சான்றிதழிலும் விசேட QR குறியீடு இடம்பெறும். இதன் மூலம் சான்றிதழின் உண்மைத்தன்மையை டிஜிட்டல் தளத்தின் ஊடாக எளிதில் சரிபார்க்க முடியும்.
அத்துடன், பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட விசேட தாளில் இந்தச் சான்றிதழ்கள் அச்சிடப்பட்டு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
