எல் -நினோ காலநிலை : அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ வெளியிட்ட தகவல்!
எதிர்காலத்தில் ஏற்படக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ள ‘எல்-நினோ’ காலநிலை நிலைமைக்கு முகம்கொடுக்க அரசாங்கம் முன்கூட்டியே திட்டங்களை வகுத்து வருவதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளரும் அமைச்சருமான நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், வளிமண்டலவியல் திணைக்களத்தின் எதிர்வுகூறல்களின் அடிப்படையில் ஜனாதிபதியின் தலைமையில் பல கட்ட கலந்துரையாடல்கள் ஏற்கனவே நடத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
எல்-நினோ காலநிலை தாக்கத்தால் குறிப்பாக விவசாயம், உணவு உற்பத்தி மற்றும் நீர் வளங்கள் உள்ளிட்ட துறைகளில் ஏற்படக்கூடிய விளைவுகள் குறித்து அரசாங்கம் சிறப்பு கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
எதிர்வரும் ஜூலை–ஓகஸ்ட் காலப்பகுதியையும் அடுத்த ஆண்டுக்கான நிலைமைகளையும் கருத்தில் கொண்டு அமைச்சுகள் மட்டத்தில் முன்னெச்சரிக்கை திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
குறிப்பாக, அடுத்த போக விவசாயச் செய்கை காலத்தில் இந்தச் சூழ்நிலைக்கு எவ்வாறு முகம்கொடுப்பது என்பது தொடர்பாக ஆய்வுகள் முன்னெடுக்கப்படுகின்றன.
எல்-நினோவின் பாதிப்புகளை குறைத்து, தேவையான நடவடிக்கைகளை உரிய நேரத்தில் செயல்படுத்துவதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
