இலங்கையில் தனியார் பேருந்து சேவையில் கடும் வீழ்ச்சி!
இலங்கையில் தனியார் பேருந்து சேவைகள் தற்போது சுமார் 25 சதவீதம் வரை வீழ்ச்சியடைந்துள்ளதாகவும், பல பேருந்துகள் டீசலுக்கு பதிலாக மண்ணெண்ணெய் பயன்படுத்தி இயக்கப்படுவதாகவும் இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
நாட்டின் பல பகுதிகளில் பேருந்து சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், குறிப்பாக கிராமப்புறங்களில் சேவைகள் பெருமளவில் முடங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. கொழும்பு போன்ற பிரதான நகரங்களில் பேருந்துகள் இயங்குவது போல தெரிந்தாலும், தொலைதூரப் பகுதிகளுக்கான சேவைகள் குறைந்துள்ளதுடன், பல சேவைகள் குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே நடைபெறுவதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதேவேளை, மொத்த சேவைகளில் பாதிக்கு மேற்பட்டவை நிறுத்தப்பட்டுள்ளன எனவும் தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 2,000 முதல் 4,000 வரையிலான பேருந்துகள் முழுமையாகவோ அல்லது பகுதியளவிலோ மண்ணெண்ணெய் பயன்படுத்தி இயக்கப்படுவதாகவும், குறிப்பாக அநுராதபுரம் மற்றும் அம்பாறை பகுதிகளில் 170க்கும் மேற்பட்ட பேருந்துகள் இவ்வாறு செயல்படுவதாகவும் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
மண்ணெண்ணெய் பயன்பாடு சட்டவிரோதமானது மட்டுமல்லாமல், அதனால் வெளியேறும் புகை சிறுவர்கள் மற்றும் பொதுமக்களின் சுகாதாரத்திற்கு தீங்கு விளைவிக்கும் அபாயம் உள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலைமைக்கு பேருந்து உரிமையாளர்களும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவும் இணைந்து பொறுப்பேற்க வேண்டும் எனவும், டீசல் விலை உயர்வுக்கு ஏற்ப கட்டணங்கள் மாற்றப்படாததே சிலர் மாற்று எரிபொருளை நாடுவதற்கான காரணமாக இருக்கலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
.jpg)