வெளிநாடுகளில் பதுங்கியுள்ள முன்னாள் அமைச்சர்களையும் பாதாள உலகக் குழுத் தலைவர்களையும் கைது செய்ய நீல, சிவப்பு அறிவிப்புகள்!


நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு வெளிநாடுகளில் இருப்பதாக நம்பப்படும் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் பாதாள உலகக் குழுத் தலைவர்களை நாட்டுக்கு கொண்டு வருவதற்காக எதிர்காலத்தில் நீல அறிவிப்புகள் அல்லது சிவப்பு அறிவிப்புகள் வெளியிடப்படும் என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அமைச்சர் கூறுகையில், முன்னாள் அமைச்சர்களாக இருந்தாலும் அல்லது பாதாள உலகக் குழு தலைவர்களாக இருந்தாலும், நீதிமன்றம் பிறப்பிக்கும் ஒவ்வொரு பிடியாணைக்கும் பொலிஸார் கட்டாயமாக நடவடிக்கை எடுப்பார்கள் என தெரிவித்தார்.

பல முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராக ஏற்கனவே பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன என்றும், அவை தொடர்பான வழக்குகளில் சட்ட நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பொலிஸ் திணைக்களம் நீதிமன்ற உத்தரவுகளை சட்டத்திற்கமைவாக நடைமுறைப்படுத்தி வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

சந்தேக நபர்களை நாட்டுக்கு திரும்ப அழைத்து வர தேவையான இடங்களில் சர்வதேச ஒத்துழைப்பும் நாடப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.