சீன அரசாங்கத்தின் நிதி உதவியின் கீழ் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள்!


சீன அரசாங்கத்தின் நிதி உதவியின் கீழ் பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களும், பெற்றோர்களுக்கான உலர் உணவுப் பொதிகளும் வழங்கும் நிகழ்வு இன்று (04) கல்முனை அல்-அஸ்ஹர் வித்தியாலயத்தில் நடைபெற்றது.

பாடசாலை அதிபர் எஸ்.எம்.எஸ். ரிசானா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், கல்முனை மாநகரசபையின் முன்னாள் பிரதி முதல்வரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொருளாளரும், கல்முனை ரஹ்மத் பவுண்டேசனின் ஸ்தாபகத் தலைவருமான ரஹ்மத் மன்சூரின் அழைப்பின் பேரில் இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங் (Qi Zhenhong) பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இதன்போது மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும், பெற்றோர்களுக்கு உலர் உணவுப் பொதிகளும் வழங்கி வைக்கப்பட்டன.

“சீன – இலங்கை சகோதர பாசம்” எனும் திட்டத்தின் கீழ் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நிகழ்வில் கௌரவ அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ். சஹ்துல் நஜீம் மற்றும் அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வெதமுல்ல ஆகியோரும் கலந்துகொண்டனர்.

மேலும், அரசியல் பிரமுகர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் நலன் விரும்பிகள் எனப் பலரும் இந்நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.