கோப்பி பயிர்ச்செய்கைக்கு புதிய காப்புறுதித் திட்டம் அறிமுகம்!
கோப்பி பயிர்ச்செய்கையை ஊக்குவிக்கும் நோக்கில் புதிய காப்புறுதித் திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்த விவசாய மற்றும் விவசாய காப்புறுதிச் சபை திட்டமிட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தைகளில் அதிக மதிப்பைப் பெற்றுள்ள கோப்பி உற்பத்தியை நாட்டில் மேலும் விரிவுபடுத்தும் நோக்கத்திலேயே இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இந்தக் காப்புறுதித் திட்டத்தின் கீழ் பயனடைய விரும்பும் விவசாயிகள், ஏற்றுமதி விவசாயத் திணைக்களத்தின் பரிந்துரைகளுக்கு அமைவாக கோப்பி பயிர்ச்செய்கையை மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோப்பி கன்றுகளை நட்ட பின்னர் முதல் மூன்று ஆண்டுகளுக்கு, ஆண்டுதோறும் காப்புறுதித் தொகையின் 7 சதவீத பிரீமியம் கட்டணத்தின் அடிப்படையில் காப்புறுதி வழங்கப்படும்.
அதன்படி, முதலாம் ஆண்டில் 510,000 ரூபாயும், இரண்டாம் ஆண்டில் 660,000 ரூபாயும், மூன்றாம் ஆண்டில் 840,000 ரூபாயும் காப்புறுதித் தொகையாக வழங்கப்படும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும், காப்புறுதித் தொகையின் 0.5 சதவீத கூடுதல் பிரீமியம் செலுத்துவதன் மூலம், திடீர் தீ விபத்துகள் மற்றும் நிலச்சரிவு உள்ளிட்ட இயற்கை அனர்த்தங்களுக்கான மேலதிக பாதுகாப்புகளையும் பெற்றுக்கொள்ள முடியும் என விவசாய மற்றும் விவசாய காப்புறுதிச் சபை தெரிவித்துள்ளது.
