16 வயது சிறுவனைக் கொடூரமாக தாக்கிய சம்பவம் : ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் கைது!


காலி பகுதியில் திருட்டுச் சம்பவம் ஒன்றுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்பட்ட 16 வயது சிறுவன் ஒருவரை கொடூரமாக தாக்கிய சம்பவம் தொடர்பில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த சில நாட்களாக குறித்த தாக்குதல் சம்பவத்தின் காணொளி சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வந்த நிலையில், அதுகுறித்து விசாரணைகளை முன்னெடுத்த காலி பொலிஸார், இரண்டு பெண்கள் உட்பட நால்வரை கைது செய்துள்ளனர்.

பொலிஸாரின் தகவலின்படி, சொத்துத் திருட்டுச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 16 வயது சிறுவன் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே, குறித்த சிறுவனை முறைப்பாட்டாளர் தரப்பினர் மனிதாபிமானமற்ற முறையில் தாக்கியதாக அவரது தாயார் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.

அதன்படி, 47 வயதுடைய பெண், அவரது கணவர் மற்றும் அவர்களின் 17 வயதுடைய மகள், மகன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இன்று (04) காலி நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.