ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு - கைவிடப்பட்ட அடையாள வேலைநிறுத்தப் போராட்டம்!


ரயில் கட்டுப்பாட்டாளர்கள் சங்கத்தினால் இன்று (10) முன்னெடுக்கப்படவிருந்த அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.

சங்கத்திற்கும் பிரதி அமைச்சரின் தனிப்பட்ட செயலாளருக்கும் இடையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது, சம்பவம் தொடர்பில் அடுத்த 48 மணித்தியாலங்களுக்குள் விசாரணை நடத்தி தீர்மானம் வழங்க இணக்கம் எட்டப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இன்று அனைத்து பயணிகள் ரயில் சேவைகளும் வழமைபோல் இயங்கும் என்றும், பொதுமக்கள் எவ்வித தடையுமின்றி பயணிக்க முடியும் என்றும் ரயில் கட்டுப்பாட்டாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

எனினும், சரக்கு போக்குவரத்து ரயில் ஊழியர்கள் மட்டும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடத் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ரயில்வே பாதுகாப்பு விதிமுறைகள் மீறப்பட்டு, பயணிகளின் உயிர் பாதுகாப்புக்கும் பொதுச் சொத்துகளுக்கும் ஆபத்து ஏற்படும் வகையில் சில நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாக சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வலியுறுத்தியுமே தொழிற்சங்க நடவடிக்கை அறிவிக்கப்பட்டதாக சங்கத்தின் செயலாளர் ருக்மால் பண்டார தெரிவித்துள்ளார்.